கீழடி அகழ்வாராய்ச்சி: தமிழர்களின் தொன்மையான வரலாற்றை இருட்டடிப்பு செய்ய நினைக்கும் கூட்டம்

 

கீழடி அகழ்வாராய்ச்சி: தமிழர்களின் தொன்மையான வரலாற்றை இருட்டடிப்பு செய்ய நினைக்கும் கூட்டம்; வைகோ கண்டனம்

- 1

கீழடி அகழ்வாராய்ச்சி ஆய்வு அறிக்கையை அந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தயாரிப்பதற்கு மத்திய தொல்லியல் துறை அனுமதி அளிக்க வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக வைகோ இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், ”சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்திற்கு அருகில் உள்ள கீழடியில் மத்திய அரசின் தொல்லியல் துறை கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் மூன்று கட்டங்களாக அகழ்வாராய்ச்சியை நடத்தியது. கீழடி பள்ளிச் சந்தைத் திடலில் காணப்படும் தொல்லியல் மேடு 110 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில் வெறும் 50 சென்ட் நிலப்பரப்பில் மட்டுமே இதுவரையில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.

இந்த ஆய்வில் கி.மு. 3 ஆம் நூற்றாண்டு தொடங்கி கி.பி. 10 ஆம் நூற்றாண்டு வரைதமிழர்களின் நகர நாகரிக வாழ்க்கையை உறுதிப்படுத்தும் தடயங்கள் கிடைத்துள்ளன. கீழடியில் நடந்த அகழ்வாராய்ச்சி வெறும் இரண்டு விழுக்காடு அளவு மட்டுமே; இரண்டு ஆண்டு கால ஆராய்ச்சியில் சுமார் 7 ஆயிரம் தொன்மையான பொருட்கள் கிடைத்திருக்கின்றன. கீழடி அகழ்வாராய்ச்சியில், ஆறு மீட்டர் தோண்டப்பட்ட தொல்லியல் குழிகளில் மூன்றாவது குழியில் எடுக்கப்பட்ட பொருட்களின் காலம் சுமார் 2 ஆயிரத்து 200 ஆண்டுகளுக்கு முந்தையது என்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்களில் இரண்டை மட்டும் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள பீட்டா அனலடிக் என்ற நிறுவனத்திற்குக் கரிம பகுப்பாய்வுக்காக மத்திய அரசு அனுப்பி வைத்தது.

அமெரிக்க நிறுவனத்தின் கரிம பகுப்பாய்வு அளித்த அந்த முடிவுகளைக் கடந்த ஆண்டில், 2017 ஜூலை 28 ஆம் தேதி மத்திய கலாச்சாரத் துறை இணை அமைச்சர் மகேஷ் சர்மா, நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அதில்,கீழடி ஆழ்வாராய்ச்சிப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பொருள் 2 ஆயிரத்து 160 ஆண்டுகளுக்கும், மற்றொரு பொருள் 2 ஆயிரத்து 220 ஆண்டுகளுக்கும் முற்பட்டவை. கரிம பகுப்பாய்வுச் சோதனையில் கீழடி நகர நாகரிகம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்டது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.

தமிழர்களின் பழமையான நகர நாகரிகம் பற்றிய ஏராளமான தடயங்கள் கிடைத்துள்ள கீழடி ஆய்வைத் திடீரென்று மத்திய தொல்லியல் துறை தடுத்து நிறுத்தியது. கீழடி அகழ்வாராய்ச்சிப் பணிகளைச் செவ்வனே செய்து வந்த தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் பணி இடம் மாற்றம் செய்யப்பட்டார்.

பணி இட மாற்றம் செய்யப்பட்ட அமர்நாத் ராமகிருஷ்ணன் கூறும்போது, கீழடி ஆய்வை இழுத்து மூடுவதற்காகத்தான் என்னைப் பணி இட மாற்றம் செய்துள்ளனர். என்னை மட்டுமல்ல, என்னைச் சேர்ந்த 25 பேரையும் பல்வேறு இடங்களுக்குப் பணி இட மாற்றம் செய்துள்ளனர். மூன்றாம் கட்ட ஆய்வைத் தொடங்கிய நிலையில் எங்களைப் பணி இட மாற்றம் செய்வதால் என் மனது வலிக்கிறது. இங்கு கீழடி ஆய்வை நாங்கள் உணர்வுப்பூர்வமாக மேற்கொண்டோம். வேறொருவர் தலைமையிலான குழு அப்படிச் செயல்படும் என்று கூற முடியாது என்று கவலை தெரிவித்தார்.

கீழடி ஆய்வில் அர்ப்பணிப்போடு செயல்பட்ட அமர்நாத் ராமகிருஷ்ணன், அசாம் மாநிலத்துக்குப் பணி இட மாற்றம் செய்யப்பட்டது ஏன்?

ஆரியர்களுக்கு முன்பே, அவர்களை விட சமூக அமைப்பிலும், கலாச்சாரத்திலும், கலை இலக்கியங்களிலும் முன்னேறிய சமூகமாக தமிழர் சமூகம் விளங்கியது என்பதை கீழடி அகழ்வாராய்ச்சி ஆதாரப்பூர்வமாக நிரூபணம் செய்வதால், தமிழர்களின் தொன்மையான வரலாற்றை இருட்டடிப்பு செய்து விடலாம் என்று இந்துத்துவாக் கூட்டம் கருதுகிறது.

இதன் பின்னணியில்தான் தற்போது மத்திய தொல்லியல் துறை, கீழடி தொல்லியல் ஆய்வு மற்றும் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் பற்றிய அறிக்கையை அமர்நாத் ராமகிருஷ்ணன் தயாரிக்கக் கூடாது என்றும், அவருக்குப் பதிலாக தற்போது பெங்களூரு அகழ்வாய்வுப் பிரிவின் ஆய்வாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளவர் கீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கையைத் தயாரிப்பார் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

மேலும், அமர்நாத் ராமகிருஷ்ணன் குழு கண்டறிந்துள்ள தொல்பொருட்கள் பெங்களூரு மற்றும் சென்னையில் மூடி முத்திரையிடப்பட்டு பாதுகாப்பாக உள்ளன. அவற்றை பெங்களூரு அகழ்வாய்வுப் பிரிவு ஆய்வாளர் அவர்கள் கதவை உடைத்து எடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய தொல்லியல் துறை அனுமதி அளித்துள்ளது.

கீழடி அகழ்வாராய்ச்சியைப் பலவிதமான நெருக்கடிகள், சோதனைகளுக்கு இடையில் தொடர்ந்து நடத்திய கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன், மத்திய பாஜக அரசின் உள்நோக்கத்தால் அசாம் மாநிலத்திற்கு பணி இட மாற்றம் செய்யப்பட்டார். தற்போது கீழடி அகழ்வாராய்ச்சியை அவர் தயாரிக்கக் கூடாது என்று உத்தரவு இடப்பட்டு இருப்பதற்கு, வரலாற்றை மாற்றி எழுதத் துடிக்கும் இந்துத்துவா கும்பலின் சதித் திட்டம் அப்பட்டமாக வெளிப்பட்டு இருக்கிறது.

மத்திய பாஜக அரசு, கீழடி அகழ்வாராய்ச்சியை அடியோடு சீர்குலைக்கத் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வந்தது. தற்போது ஒரேயடியாக ஆய்வறிக்கையை மாற்றி, உண்மை வரலாற்றைக் குழிதோண்டிப் புதைக்க நினைப்பது கடும் கண்டனத்துக்கு உரியது.

இந்துத்துவாக் கூட்டத்தின் அட்டூழியங்களுக்குத் தமிழக மக்கள் உரிய வகையில் பதிலடி கொடுப்பார்கள். கீழடி அகழ்வாராய்ச்சி ஆய்வு அறிக்கையை அந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தயாரிப்பதற்கு மத்திய தொல்லியல் துறை அனுமதி அளிக்க வேண்டும்” என வைகோ வலியுறுத்தியுள்ளார்.

Source link

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

   உங்கள் கருத்தை இடுக...

   வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

   error: Content is protected !!
   தமிழ் DNA
   Logo
   Register New Account
   Reset Password
   %d bloggers like this:
   Shopping cart