நற்றிணை – சங்க கால காதல் வாழ்க்கை

நற்றிணை பாடல் 6

நீர்வளர் ஆம்பல் தூம்புடைத் திரள்கால்
நார்உரித் தன்ன மதனில் மாமைக்
குவளை யன்ன ஏந்தெழில் மழைக்கண்
திதலை அல்குற் பெருந்தோள் குறுமகட்கு
எய்தச் சென்று செப்புநர்ப் பெறினே!
‘இவர்யார்?’ என்குவன் அல்லள்; முனாஅது
அத்தக் குமிழின் கொடுமூக்கு விளைகனி
எறிமட மாற்கு வல்சி ஆகும்
வல்வில் ஓரி கானம் நாறி
இரும்பல் ஒலிவரும் கூந்தல்
பெரும்பே துறுவள்யாம் வந்தனம் எனவே!

நற்றிணை – 6

பரணர்

தலைசிறந்த புலவரான கபிலருக்குப் பரணர் நண்பர். இவரும் தலைசிறந்த புலவரே. இலக்கணத்தில் உம்மைத் தொகைக்கு எடுத்துக் காட்டாகக் ‘கபிலபரணர்’ எனும் தொடரையே காட்டுவர்.

இது இவ்விருவரின் நட்பை மட்டுமன்றி, ஒப்பான புலமை மேம்பாட்டையும் குறிப்பதாகும்.

அகப்பாடல்களில் மன்னர், வள்ளல்கள், ஊர்கள் பற்றிய புறச் செய்திகளைப் பொருத்தமாக இணைத்துப் பாடுவதில் பரணர் இணையற்றவர். இவர் பாடலுக்குப் பரிசாகக் கடல்பிறக் கோட்டிய செங்குட்டுவன் என்ற சேரமன்னன் தன் மகன் குட்டுவன் சேரலையே வழங்க முன் வந்தான் என்பது, பரணர் கவிதையின் மேன்மையையும் செங்குட்டுவனின் தமிழ்ச்சுவை ஆர்வத்தையும் ஒருங்கே உணர்த்தும் செய்தியாகும்.

திணை : குறிஞ்சி

துறை: இரவுக்குறிப்பாற்பட்டு ஆற்றானாகிய தலைவன், தோழி கேட்பத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.

கூற்று : இரவுக்குறியில் வந்து தலைவியைச் சந்திக்க முடியாது வருந்தும் தலைவன் தோழி கேட்பத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. அதாவது இரவுக்குறி வேண்டி வந்தவன், தான் வந்திருக்கும் செய்தியைத் தலைவியிடம் போய்ச் சொன்னால் போதும்; ‘யார்’ என்று கேட்காமலே அவள் பெரிதும் மகிழ்வாள்; அவ்வாறு போய்ச்சொல்ல யாருமில்லையே என்று வருந்துகிறான்.

(இரவுக்குறி : தலைவன் தலைவியை இரவில் சந்திக்க ஏற்பாடு செய்து வைத்த இடம்)

தலைவன் தன் நெஞ்சை நோக்கிப் பேசுகிறான் : ‘என் நெஞ்சே ! ஆம்பல் பூவின் தண்டை உரித்தாற் போன்றிருக்கிற, சற்று அழகு குறைந்த மாமை நிறமும், குவளைக் கண்ணும், தேமல் படர்ந்த அல்குலும், பெரிய தோள்களும் உடைய நம் தலைவியிடம் நமது வருகையை யாரேனும் சென்று தெரிவித்தால் ‘அவர் யார்?’ என்று கேட்கமாட்டாள். குமிழ மரத்தின் கனிகளை இளமான்கள் விரும்பி உண்ணும் வல்வில் ஓரியின் கானம் போல நறுமணம் கமழ்கின்ற அடர்ந்த கருங்கூந்தலையுடைய அவள் ‘யாம் வந்திருக்கிறோம்’ என்பதைக் கேட்டவுடனே களிமயக்கம் கொள்வாள்’

‘அவ்வாறு சென்று சொல்ல யாருமில்லையே !‘ எனக் குறிப்புணர்த்தித் தனக்கு உதவுமாறு தோழியைத் தலைவன் வேண்டுவதை நாம் உணர்கிறோம். தலைவி அவனை நன்கறிவாள் என்பதையும் அவனுக்காகவே காத்திருக்கிறாள் என்பதையும் “இவர் யார் என்குவள் அல்லள்”, “பெரும்பேதுறுவள் யாம் வந்தனம் எனவே” எனும் கூற்றுகளால் உணரலாம்.

மானுக்குக் குமிழ மரத்தின் கனிபோலத் தலைவிக்குத் தலைவன் வரவு இனியது எனும் குறிப்புப் பொருள் கவிதையில் உணர்த்தப்படுகிறது.

வல்வில் ஓரி என்னும் மன்னனைப் பற்றிய குறிப்பு வரலாற்றை அறிய உதவுகிறது.

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

   உங்கள் கருத்தை இடுக...

   வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

   error: Content is protected !!
   தமிழ் DNA
   Logo
   Register New Account
   Reset Password
   %d bloggers like this:
   Shopping cart