நற்றிணை – சங்க கால காதல் வாழ்க்கை

நற்றிணை பாடல் 3

ஈன்பருந் துயவும் வான்பொரு நெடுஞ்சினைப்பொரியரை வேம்பின் புள்ளிநீழல்கட்டளை அன்ன இட்டரங்கு இழைத்துக்கல்லாச் சிறாஅர் நெல்லிவட் டாடும்வில்லேர் உழவர் வெம்முனைச் சீறூர்ச்சுரன்முதல் வந்த உரன்மாய் மாலைஉள்ளினேன் அல்லெனோ, யானே – உள்ளியவினைமுடித் தன்ன இனியோள்மனைமாண் சுடரொடு படர்பொழுது எனவே?

– நற்றிணை – 3

இளங்கீரனார்

பாலைத்திணையையும், பாலை நிலத்து வேடுவர் இயல்புகளையும் சிறப்பாகப் பாடியுள்ள இப்புலவர் வேடர் மரபில் வந்தவர் எனக் குறிப்பிடப்படுகிறார். தலைவியின் இனிமைக்கு, வினை (மேற்கொண்ட செயல்) முடித்தலால் வரும் இனிமையை உவமை காட்டிய இவரது கவிதை அகம்-புறம் இரண்டையும் சிறப்பாக இணைக்கிறது.

திணை : பாலை
கூற்று : முன்னொரு முறை பொருள்வயின் பிரிந்த தலைமகன் மீண்டும் பொருள் தேடப் புறப்படுமாறு தூண்டும் தன் நெஞ்சை நோக்கிச் சொல்லியது.
முன்னைய பிரிவின் போது, மாலைப் பொழுதில், தன் தலைவி எவ்வாறு வருந்துவாள் என்பதை நினைத்து வருந்தியிருந்த தலைவன், அதனை இப்போது தன் நெஞ்சிற்கு நினைவுபடுத்துகிறான்.

தலைவன் பேசுகிறான்: ‘நெஞ்சே! வழிப்போக்கரைத் துன்புறுத்தி வாழும் வில்வீரர்களின் பாலை நிலக்குடியிருப்பு அது. குஞ்சுகளை ஈன்ற (குஞ்சு பொரித்த) பருந்து அசதியுடன் தங்கியிருக்கும் வேப்ப மரத்தின் புள்ளி நிழலில் சிறுவர்கள் நெல்லிக்காயைக் கொண்டு பாண்டில் ஆடுவர். வெம்மையான அச்சிற்றூரில் தலைவியைப் பிரிந்து தனித்திருந்த போது என் மன வலிமையைக் கொல்லும் மாலைப் பொழுது வரும். கருதிய செயலை முடித்தால் எத்தகைய இனிமை கிட்டுமோ அது போன்ற இனிமையுடைய நம் தலைவி இந்த மாலைப்பொழுதில் விளக்கேற்றி அதன் முன் நின்று ‘அவர் இன்னும் வரவில்லையே’ என வருந்திக் கொண்டிருப்பாள் என நினைத்து நான் வருந்தினேன் அல்லவா!’

‘இதனை நன்கறிந்த நீ இப்போது பொருளுக்காகத் தலைவியைப் பிரியத் தூண்டலாமா?’ என்பது தலைவன் நெஞ்சினிடம் கேட்காமல் கேட்கும் கேள்வி. தலைவனுக்குள் நிகழும் மனப்போராட்டத்தில் பொருளாசையை வெல்கிறது காதல் உணர்வு. “வினை முடித்தன்ன இனியோள்” என்று தலைவியைக் குறிப்பிடுவது, அவளைப் பிரிந்து சென்று அடையக் கூடிய இனிமை வேறில்லை என்பதைப் புலப்படுத்துகிறது.

மரத்திலுள்ள பருந்துக்கு வருத்தம்; மரத்தடியில் விளையாடும் சிறுவர்க்கு மகிழ்ச்சி! இந்தக் காட்சி பிரிவை எண்ணி வருந்தும் தலைவனையும் பொருளை எண்ணி மகிழும் நெஞ்சையும் குறிப்பாக ஒப்புமைப்படுத்துவதை உணரலாம்.

நற்றிணை பாடல் 4

கானலஞ் சிறுகுடிக் கடல்மேம் பரதவன்நீனிறப் புன்னைக் கொழுநிழல லசைஇத்தண்பெரும் பரப்பின் ஒண்பதம் நோக்கிஅந்தண் அரில்வலை உணக்குந் துறைவனொடுஅலரே, அன்னை யறியின் இவணுறை வாழ்க்கைஅரிய வாகும் நமக்கெனக் கூறிற்கொண்டுஞ் செல்வர்கொல் தோழி உமணர்வெண்கல் உப்பின் கொள்ளை சாற்றிக்கணநிரை கிளர்க்கும் நெடுநெறிச் சகடம்மணல்மடுத் துரறும் ஓசை கழனிக்கருங்கால் வெண்குருகு வெரூஉம்இருங்கழிச் சேர்ப்பிற்றம் உறைவின் ஊர்க்கே.

– நற்றிணை – 4

அம்மூவனார்

இவர் நெய்தல் திணையைப் பாடுவதில் சிறந்தவர். நெய்தல் நில வளங்களும் அழகுகளும் இவர் பாடலிற் காணப்படும் சிறப்பியல்புகள் ஆகும். ஐங்குறுநூற்றில் நெய்தல் திணைப்பாடல்கள் நூறும் இவர் பாடியவையே. கடற்கரைப் பட்டினங்களாகிய தொண்டியும், கொற்கையும் இவர் பாடல்களில் சிறப்பிக்கப்படுகின்றன. இவர் சேர நாட்டைச் சேர்ந்தவர் எனக் கருதப்படுகிறார்.

திணை : நெய்தல்
கூற்று : தலைவன் சிறைப்புறமாக நிற்கத் தோழி அலர் அச்சம் தோன்றச் சொல்லி வரைவு கடாயது.

களவுக் காதலைப் பிறர் அறிந்தால் அலர் தூற்றுவர்; அன்னை இற்செறிப்பாள் என்பதனைத் தலைவியிடம் பேசுவது போலத் தலைவனுக்குச் சொல்லித் ‘தலைவியை மணந்து கொண்டு உனது ஊர்க்கு அழைத்துச் செல்வதே நல்லது’ எனக் குறிப்புணர்த்துகிறாள் தோழி. (சிறைப்புறம்: வேலிப்புறம்: அலர்: களவுக் காதலை அறியும் அயலார் பழிதூற்றுதல். வரைவு கடாதல் : திருமணம் செய்து கொள்ளுமாறு வேண்டுதல்.)

தோழி தலைவியை நோக்கிப் பேசுகிறாள் : ‘தோழி ! பரதவர்கள் மீன் பிடிக்கக் கடல் மீது செல்வதற்காக நல்லநேரம் பார்த்துப் புன்னையின் செழிப்பான நிழலில் தங்கியிருப்பர். மீன் பிடி வலைகள் மணலில் புலர்ந்து கொண்டிருக்கும். அத்தகைய கடல்துறைத் தலைவராகிய நம் தலைவரிடம் சென்று, நமக்குண்டாகிய பழிச்சொல்லை அன்னை அறிந்தால் இங்கே சந்தித்தல் அரிதாகிவிடும் என்பதைச் சொல்லிவிடலாமா? சொன்னால் அவர் நம்மைத் தம் ஊர்க்கு அழைத்துச் செல்ல மாட்டாரா? கடற்கழிகள் சூழ்ந்த அவரது ஊர் இனிய காட்சிகள் நிறைந்தது; உப்பு வாணிகரின் ஆரவாரத்தில் பசுக்கூட்டங்கள் திடுக்கிட்டெழும்; அவர்களின் வண்டிச்சக்கரங்கள் மணலில் எழுப்பும் நறநற எனும் ஓசைகேட்டுக் கழனியில் உள்ள நாரைகள் அஞ்சும். அவ்வூர்க்கு நம்மைக் கொண்டு செல்ல மாட்டாரா?’

முறைப்படி தலைவன் தலைவியை மணந்து கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோள் குறிப்பாகத் தெரிகிறது கவிதையில். வண்டிச்சக்கரம் எழுப்பும் ஓசைக்கு நாரைகள் அஞ்சும் என்பது, தலைவன் மணம்பேச வரும் முரசு ஒலி கேட்டால் அலர் தூற்றுவோர் அடங்குவர் என்பதைக் குறிப்பாக உணர்த்துகிறது.

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

   உங்கள் கருத்தை இடுக...

   வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

   error: Content is protected !!
   தமிழ் DNA
   Logo
   Register New Account
   Reset Password
   %d bloggers like this:
   Shopping cart