புகையிலை பழக்கத்தை விட்டு விட 2 வழிகள்

புகையிலை பழக்கத்தை விட்டு விட 2 வழிகள் உண்டு .

சிகெரெட் , பீடி , குட்கா , ஹான்ஸ் . மூக்கு பொடி போன்ற புகையிலை பொருட்களை பயன்படுத்தும் பலரும் சொல்லுவது இது தான் “விட்டுவிட வேண்டுமென்று தான் நினைக்கிறேன் , எவ்வாறு என்று தான் தெரியவில்லை”. அப்படிப்பட்டவர்களுக்கு புகையிலை பழக்கத்தை விட்டு விட 2 வழிகள் உண்டு அவற்றை பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.

How to Stop Smoking in Tamil (Two Steps)

 1. ஒரேடியாய் நிறுத்திவிடுவது (Cold Turkey)
 2. படிப்படியாய் அளவை குறைத்து , கடைசியில் நிறுத்திவிடுவது . (TapTapering)

இவை இரண்டையும் விரிவாய் இப்போது பார்ப்போம் .

1. ஒரேடியாய் நிறுத்துவதற்கான வழிமுறைகள் :

இந்த முறையின் படி , புகையிலை பழக்கத்தை நிறுத்த , ஒரு நாளை குறித்துக் கொள்ளுங்கள் . அந்த நாள் இன்றாகவும் இருக்கலாம் , உங்கள் அல்லது உங்களுக்கு பிடித்தவர்களின் பிறந்த நாள் , உங்கள் திருமண நாள் அல்லது உங்கள் அன்புக்குரியவர்கள் புகையிலையால் இறந்த நினைவு நாளாகக் கூட இருக்கலாம் .

புகையிலை பழக்கத்தை நிறுத்த வேண்டும் என்று நினைத்தவுடனேயே , அந்த நாளை குறித்து விடுங்கள் . நெடுநாட்கள் தள்ளிப்போட வேண்டாம் .

நீங்கள் புகையிலை பழக்கத்தை ஒரேடியாய் விடப்போவதை உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள் . ஒருவரையும் விட வேண்டாம் , உடன் வேலை பார்ப்பவர் , நண்பர்கள் , அக்கம் பக்கத்தினர் , சொந்தக்காரர்கள் , பங்காளிகள் , குடும்பத்தினர் , மிக முக்கியமாக உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் என நீங்கள் சந்திக்கும் எல்லோருக்கும் தெரியப்படுத்துங்கள் .

புகைப்பழக்கம் கெட்டது

மேலும் நீங்கள் புகையிலை பொருள் வாங்கும் கடைக்காரர்கள் . அப்போது தான் நீங்கள் வரும் போது , அவர்களாகவே புகையிலை பொருளை எடுத்து உங்கள் முன் வைக்கமாட்டார்கள் .

ஏன் உங்களை தெரிவிக்க சொல்கிறார்கள் என்றால் , அதற்கு காரணங்கள் இரண்டு .

 1. உங்களை ஊக்குவித்து உங்கள் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க
 2. நீங்கள் ஒரு வேளை நிறுத்தாமல் போனீர்களானால் , கேள்வி கேட்க , தங்களை வருத்தி அதன் மூலம் உங்களை நிறுத்த வைக்க.

எனக்கு தெரிந்தவர் ஒருவரின் குடும்பத்தில் , குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே 2 நாட்கள் சாப்பிடாமல் இருந்து , குடும்பத்தலைவரை புகையிலை பழக்கத்திலிருந்து மீட்டெடுத்துள்ளார்கள் .

விளைவுகள்

File:Risks form smoking-smoking can damage every part of the body.png

Health effects of tobacco

புகையிலை பழக்கத்தை நிறுத்தியவுடன் , அதிக பட்சம் 2 வாரங்களுக்கு Withdrawal effects எனப்படும் ‘ நிறுத்துதலால் உந்தப்பட்ட உபாதைகள் ‘ ஏற்படும் . அதற்கு பயந்து மீண்டும் புகையிலை பழக்கத்தை தொடங்கி விடக் கூடாது . அறிவியல் உண்மை என்னவென்றால் , இரண்டு வாரங்களுக்கு மட்டுமே அந்த உபாதைகள் இருக்கும் . அதை நீங்கள் சமாளித்து , போராடி வென்றால் மட்டுமே புகையிலை அரக்கனை நீங்கள் வெல்ல முடியும் . இல்லையெனில் புகையிலை உங்களை வென்று , பல நோய்களுக்கு ஆளாக்கி , வெகுகாலத்திற்கு பின் மரணிக்க வைத்து விடும் .

பழக்கத்தை நிறுத்திய பிறகு:

சிகரெட்டுக்காக மனம் ஏங்குதல் தூக்கமின்மை தொடரும் இருமல் மனச்சோர்வு, மனக்கலக்கம், எரிச்சலுணர்வு அதிக பசி மற்றும் உடல் எடை கூடுதல் ஆகியவை புகை பிடித்தலை நிறுத்தியவர்கள் சந்திக்கக்கூடிய பின் விளைவுகளாகும்.

பலருக்கு புகையிலை பழக்கமென்பது , வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே ஆகி இருக்கும் . அது இல்லாமல் இருப்பது என்பதை எதையோ ஒன்றை ‘மிஸ்’ செய்வது போல் இருக்கும் . உங்கள் அன்புக்குரியவர் இறந்ததது போல் கூட தோன்றலாம் . அதையெல்லாம் ஏற்றுக்கொண்டு வெற்றி பெற உங்களை தயார் செய்து கொள்ளுங்கள் .

புகையிலை பழக்கத்தை நிறுத்த , 4D எனப்படும் முறையை உளவியலாளர்கள் சொல்லித்தருவதுண்டு . அவை:

 1. D – Delay,
 2. D – Distract,
 3. D – Drink Water,
 4. D – Deep Breath.

எண்ணத்தை தள்ளிப்போடுங்கள்

புகையிலை பொருளை பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் வந்தவுடன் எண்ணத்தை 5 முதல் 10 நிமிடங்கள் வரை தள்ளிப்போடுங்கள். தள்ளிப்போட்டவுடன் , உங்கள் சிந்தனை முழுவதும் அதைப்பற்றியே இருக்கும் . ஆனால் கொஞ்ச நேரத்தில் அந்த எண்ணம் மறைந்து விடும் .

ஒரு சின்ன குழந்தை சாக்லேட் கேட்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள் , அம்மா வாங்கி கொடுக்க மாட்டேன் என்கிறார் . குழந்தை என்ன செய்யும் ? தன்னால் முடிந்த வரை அடம் பிடித்து பார்க்கும் , கொஞ்சி பார்க்கும் , வீரிட்டு அழும் , சத்தம் போடும் . எதற்கும் அம்மா மசியவில்லை எனில் கடைசியில் டயர்ட் ஆகி விட்டுவிடும் அல்லது தூங்கி விடும் . அதே போல் தான் நமது எண்ணங்களும் .

தள்ளிப்போட தள்ளிப்போட எண்ணங்களின் வலு குறைந்து விடும் .

நடிக்க தொடங்குங்கள்

மேலும் , அந்த எண்ணத்திற்கு அவ்வளவு தூரம் முக்கியத்துவம் கொடுத்து அதைப் பற்றி சிந்திப்பதை தவிருங்கள் . 15 வது மாடியிலிருந்து கீழே எட்டி பார்க்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள் . சாதாரணமாக நமக்கு என்ன தோன்றும் ? விழுந்துவிடுவோமோ என்றுதானே , ஆனால் அந்த எண்ணத்திற்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கிறோமா ? இல்லைதானே ! அதே போல் புகையிலை பொருளை பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் வந்தவுடன் அதனை கண்டுகொள்ளாதது போல் , நடிக்க தொடங்குங்கள் . நாளடைவில் நடிப்பு நிஜம் ஆகி விடும் . கண்டுகொள்ளாமல் தள்ளிப்போடுவதே முதல் D.

இரண்டாவது D என்பது Distract:

கவனத்தை திசை திருப்பி வேறு எண்ணங்களில் செலுத்துங்கள் . உங்கள் ஃபோனில் ரேடியோ அல்லது பாட்டு கேட்கலாம் . யாராவது ஒருவருக்கு ஃபோன் செய்து பேசலாம் , அந்த இடத்திலிருந்து வெளியேறி கொஞ்ச தூரம் நடந்து செல்லலாம். இதைத்தான் செய்ய வேண்டுமென்று இல்லை . உங்கள் கவனத்தை திசைத்திருப்பும் எதையும் செய்யலாம் .

இவ்வாறு 10 நிமிடங்களுக்கு உங்கள் கவனத்தை திசை திருப்ப முடிந்தால் , புகையிலை பொருள் பற்றிய எண்ணம் தானாக மறைந்து விடும் .

3-வது D – Drink Water & 4-வது D – Deep Breat:

புகையிலை பொருள் பற்றிய எண்ணம் வந்தவுடன் ‘மெதுவாக’ , ‘ விழிப்புணர்வுடன்’ தண்ணீர் குடிக்க வேண்டும் . ஆகவே எப்போதும் தண்ணீரை அருகிலேயோ அல்லது கைப்பயிலோ வைத்திருக்க வேண்டும் . மெதுவாக , அடக்காமல் 5 முதல் 8 முறை மூச்சை இழுத்து விடுவதும் நல்ல பலனை தரும் .

புகை பிடிப்பவர் நுரையீரல்

புகை பிடிப்பவர் நுரையீரல்

புகையிலை பொருள் பற்றிய எண்ணம் வரும்போதெல்லாம் , புகையிலையால் ஏற்படப்போகும் விளைவுகளை கற்பனை செய்து பாருங்கள் . கொஞ்ச நாட்களில் , உங்கள் எண்ணங்களின் வலு வெகுவாக குறைந்திருக்கும் .

புகையிலை பொருளை பயன்படுத்த தூண்டும் சூழ்நிலைகளையும் , ஆட்களையும் , இடங்களையும் முழுவதுமாக தவிர்த்து விடுங்கள் .

இவ்வாறு ஒரேடியாய் நிறுத்த முடியும் என்ற நம்பிக்கை இல்லாமலோ அல்லது நிறுத்துதலால் உந்தப்பட்ட உபாதைகள் பற்றிய பயமோ இருந்தால் இதோ இருக்கிறது அடுத்த வழி .

2. படிப்படியாய் நிறுத்துவது

படிப்படியாய் அளவைக் குறைத்து கடைசியில் நிறுத்துவதற்கான வழிமுறைகள் :

இந்த முறையிலும் , முழுமையாய் நிறுத்த போகும் நாளை குறித்துக்கொண்டு அனைவருக்கும் தெரிவியுங்கள் . 4D வழிமுறைகளை பயன்படுத்துங்கள் .

முடியவே இல்லையெனில் , நீங்கள் செய்ய வேண்டியது புகையிலை பொருளை பயன்படுத்துவது அல்ல !. புகையிலை பொருளில் உங்களுக்கு போதை கொடுத்து ரிலாக்ஸ் செய்ய வைக்கும் நிக்கோடினை மட்டுமே எடுத்துக்கொள்வது. எப்படி என்று கேட்கிறீர்களா ?

முள்ளை முள்ளால் எடுப்பது போல…

நிக்கோடின் பபிள் கம் இப்போது 2 mg அளவில் , மின்ட் ஃபிளேவரிலும் , குட்கா ஃபிளேவரிலும் , எல்லா பெரிய மருந்து கடைகளிலும் கிடைக்கிறது . உங்களுக்கு தேவையான ஃபிளேவரை நீங்களே மருந்து கடைக்கு சென்று வாங்கிக்கொள்ளலாம் .

கொஞ்சம் கொஞ்சமாக நிக்கோடின் உங்கள் வாயின் உட்புறத்திலேயே உறிஞ்சப்பட்டு , நேரடியாக இரத்த ஓட்டத்தில் கலந்து , நீங்கள் புகையிலை பொருளை பயன்படுத்தும் போது , என்ன மாதிரி இருக்குமோ அதே உணர்வை உருவாக்குகிறது .

கொஞ்சம் மெதுவாக இது நடக்கும் . அதனால் உடனே போதை வர வேண்டுமென்று எதிர்பார்க்க வேண்டாம் . போதை குறைந்த உடன் , மீண்டும் மெதுவாக அதனை மெல்லலாம் , காரச்சுவை வந்தவுடன் நிறுத்தி விடலாம் .

இவ்வாறு ஒரு பபிள் கம்மில் 3- 4 முறை செய்யலாம் . சாதாரண பபிள் கம்மை போல மென்றீர்களானால் , உங்கள் வாய் முழுக்க காரம் சார்ந்து எரிச்சலை உண்டாக்கும் . மிக முக்கியமாக அதில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை நன்கு படித்துக்கொள்ளவும் . இந்த பபிள் கம்மை பயன்படுத்தும் போது , புகையிலை பொருட்களை அறவே பயன்படுத்தக்கூடாது .

இந்த பபிள் கம்மையும் ஒரே அளவில் பயன்படுத்தி வரக்கூடாது . படிப்படியாக குறைத்து , கடைசியில் குறிப்பிட்ட நாளில் நிறுத்த வேண்டும் . ஆகவே இந்த சிகிச்சை உங்கள் பழக்கத்தை நிறுத்தும் முயற்சியை எளிதாக்குமே தவிர , மேஜிக் செய்து நிறுத்த செய்யாது .

இந்த பபிள் கம் சிகிச்சையை Nicotine Replacement Therapy என்று கூறுகிறோம் . முள்ளை முள்ளால் எடுப்பது போல , இந்த சிகிச்சை வேலை பார்க்கிறது .

நிக்கோடினுக்கு அடிமையான உடலுக்கும் , மனதுக்கும் வேறு எந்த ஒரு விஷத்தன்மை உள்ள பொருட்களும் இல்லாது நிக்கோடினை மட்டும் தருவது தான் இதற்கு பின்னால் உள்ள தத்துவம் .

ஆக படிப்படியாய் குறைத்து விட்டு விடுவது என்பது , புகையிலை பொருள் பயன்பாட்டை அல்ல , நிக்கோடினை தான் . புகையிலை பொருட்கள் பயன்பாட்டை குறைப்பது என்பது பலருக்கு முடியாத காரியம் , ஏனெனில் உலகிலேயே அதிக அளவு அடிமைப்படுத்தும் சக்தி புகையிலை பொருட்களுக்கு தான் உள்ளது .

புகை உயிரை கெடுக்கும்

மேற்சொன்ன வழிமுறைகளை உங்களால் செய்ய முடியாமல் போனாலோ அல்லது அவற்றை கடைபிடிப்பதில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டாலோ அல்லது நிறுத்துதலால் உந்தப்பட்ட உபாதைகளை சமாளிக்க முடியாமல் போனாலோ ஒரு பொது மருத்துவரையோ , பல் மருத்துவரையோ , மன நல மருத்துவரையோ அல்லது உளவியல் ஆலோசகர்களையோ அணுகுங்கள் .

மேலும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை , அரசு பல் மருத்துவக் கல்லூரி ( ம ) மருத்துவமனை , ராகா பல் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை போன்ற பல இடங்களில் புகையிலை பழக்கத்தை நிறுத்துவதற்கான இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது . அங்கு சென்று இதற்கான சிகிச்சையை பெற்று உங்கள் வாழ்வை வளமாக்குங்கள் . வாழ்த்துக்கள் !

உளவியல் பற்றி, மேலும் பதிவுகள் படிக்க

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

   உங்கள் கருத்தை இடுக...

   வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

   Register New Account
   Reset Password
   lida viagra fiyat cialis sipariş escort bayan