61. மண் சுமந்த படலம்

607 0

திருவிளையாடற்
புராணம்


61. மண் சுமந்த படலம்

61. மண் சுமந்த படலம்

வைகையில் வெள்ளப் பெருக்கு எடுத்தது; அதனைச் சுருக்கக் கரைகள் கட்டும் பணியை வகுத்துத் தந்தனர். வீட்டுக்கு இவ்வளவு கரை என்று அளந்து தந்தனர். அளப்பரிய கருணைக்கடலாகிய சோம சுந்தரரிடம் ஈடுபாடும் வழிபாடும் கொண்டிருந்த வந்தி என்னும் கிழவிக்கு உரிய பங்கை அளந்து விட்டனர். பிட்டு விற்று அதனால் வரும் துட்டைக்கொண்டு காலம் கடத்தும் அவள் தனியாளாக இருந்தாள். கட்டியவனும் இல்லை. அன்பு கொட்டி வளர்க்கும் காதல் மகனும் தனக்கு இல்லை. வீட்டுக்கு ஒரு ஆள் அனுப்பப்படும் நிலையில் அவள் என்ன செய்வாள்.

தான் வழிபடும் தெய்வமாகிய சோமசுந்தரரிடம் முறையிட்டாள். “கல்விப்பெருக்கைப் போல் தடை படாமல் வரும் வெள்ளப்பெருக்கை அடக்க அவரவர் தம் கடமை செய்கின்றனர். உன்னைத் தவிர வேறு உடைமை எனக்கு இல்லாத நிலையில் எனக்கு நீ உதவ வேண்டும்” என்று முறையிட்டுக் கரையிட்டு மண் கொட்ட ஆள் கேட்டவளாய்த் தன் தொழிலில் ஈடுபட்டவளாக இருந்தாள். வழக்கம்போல் பிட்டு அங்கு விற்றுக்கொண்டிருந்தாள்.
மண் வாசனையை நேரில் அறிய விண்ணவர் வழிபடும் தேவனாகிய சோமசுந்தரர் தலையில் சும்மாடுகட்டி மண்வெட்டியோடு இடுப்புக்கு ஒரு ஆடையும் மேலுக்கு ஒரு ஆடையும் தாங்கி வாட்ட சாட்டமான வாலிபத் தோற்றத்தோடு கூலிக்கு ஆள் தேவையா?’ என்று குரல் கொடுத்துக் கொண்டு வந்தியை நோக்கி வந்தார்.

“சுந்தரனே; இங்கே வா; என்று அழைத்தாள் அந்தப் பாட்டி. எந்திரம் போல் சுற்றி வந்து அவள் முன் நின்றான்.

“கூலிக்கு ஆள் வர முடியுமா?”

“வருகிறேன்; என்ன தருகிறாய்?”

“பிட்டுத் தவிரத் துட்டு என்னிடம் இல்லை தம்பி”

“உதிர்ந்த பிட்டுகளைத் தந்தால் போதும் பசியாறக் கொடு; அது போதும்”

‘சரி’ என்றாள்

“களைத்து வந்திருக்கிறேன்; முதலில் பிட்டு கொடு”
என்றான்.

“தேவர் அமுதினும் இனியது” என்று சுவைத்துப் பாராட்டினான்.

வேலை செய்யாமலேயே ஓடிப்பாடி ஆடித்திரிந்து விட்டுப் பசிக்குது” என்று சொல்லிக் கை நீட்டினான்.

அம்முதியவளும் முகம் கோணாமல் சுட்ட பிட்டை எல்லாம் அவனுக்கே தந்து மனம் மகிழ்ந்தாள்.
மற்றவர்கள் பங்கெல்லாம் அடைபட்டு முடிந்தன; கிழவியின் பங்கு மட்டும் அப்படியே இருந்தது. அதன் வழியாக வெள்ளம் கரை மீறி வெளியேறியது.

“யாரது? யாருடைய பங்கு?” என்று அதட்டிக் கேட்டனர் மேலதிகாரிகள்.

“வந்தியின் பங்கு” என்றார் கூலியாள்.

“ஏன் அடைபடாமல் இருக்கிறது”

“தடைபடாமல் பிட்டு உண்கிறேன். தின்று முடிய வில்லை” என்று எதிர் பேசினான்.

அரசனிடம் ஆட்கள் கோள் மூட்டினர். “இந்த ஆள் மட்டும் தன் கடமையைச் செய்யவில்லை. பார்த்தால் பசி தீரக் கூடிய அழகு அவனிடம் இருக்கிறது. பரம்பரைத் தொழிலாளியாகத் தெரியவில்லை; பார்த்திபன் மசன் போல் மேனிப்பொலிவோடு இருக்கிறான்; பெரிய வீட்டுப் பிள்ளை போல் இருக்கிறான்; அவனை அடிக்க எங்களுக்கு மனம் வரவில்லை; கட்டிப் பிடிக்க அவன் அகப்படவில்லை என்று அறிவித்தனர். பாண்டியன் கையில் பொற்பிரம்பு ஒன்று ஏந்திக் கட்டிய கரைகளையெல்லாம் பார்த்துக் கொண்டு மன நிறைவு கொண்டு வந்தவன் பல் ஒன்று உடைந்த பொக்கை வாய் போன்று இருந்த இந்தக் கரைப் பகுதியையும் கண்டான். “யார் இக்கரைகட்டவேண்டியது அக்கரை காட்டவில்லையே” என்று வினவினான்.

குந்தியிருந்த வந்தி எழுந்து நின்றாள். “என் பங்கு இது” என்றாள். “ஏன் அடைக்கவில்லை” என்று கேட்டான் “என் ஆள் இன்னும் பிட்டுத் தின்று முடிக்க வில்லை” என்று கூறினாள்.
“யார் இங்கே வா” என்று அழைத்தான்.

பார் மகிழப் பாடிக் கொண்டே வந்து நின்றான்.

“உன்னைப் பார்த்தால் வேலை செய்பவன் போல் தெரியவில்லை”

“கண்ணுக்குச் தெரியாது; ஆனால் நான் தான் இருந்து ஆற்றுகிறேன்” என்றான்.

“மண்ணைச் சுமக்க வந்த நீ பண்ணைச் சுமந்து பாடுவது ஏன்?”

“கோயிலில் இசை கேட்டுப் பழக்கம்”

“மற்றவர்கள் எல்லாம் தம்பங்கை முடித்து விட்டார்களே” என்றான்.

“பிட்டுக் கிடைத்திருந்தால் அவர்களும் தின்று இருந்திருப்பார்கள். சுவை என்னைக் கட்டுப்படுத்திவிட்டது”

“சுவைபடப் பேசுகிறாய்” கவைக்கு நீ உதவமாட்டாய்” என்றான் அரசன்.

“உன் பெயர் என்ன?”

“அழகாக இருப்பதால் சுந்தரன் என்று அழைப்பார்கள். முடியில் பிறை அணிந்திருந்தேன்; அதனால் சோமசுந்தரன் என்றும் கூறுவர்”.

“உன் ஊர் எது?”

“இனிமை மிக்க மதுரை”

“எங்கே தங்கி இருக்கிறாய்?”

“வீடு என்பது எனக்கில்லை; கோயில் சுடுகாடு”
“மனைவி?”

“அவள் பாதியாகி விட்டாள்”

“பிள்ளைகள்?”

“பெரியவன் கொழுக்கட்டைப் பிரியன்; சின்னவன் மயிலேறும் பெருமாள்”

“உன்னைப் பார்த்தால் பிள்ளைகுட்டிக்காரனாகத்
தெரியவில்லையே”

“என்றும் இளமையோடிருப்பேன்; அதனால் தெரியாது”

“நான் இந்த நாட்டு அரசன்; என்னைக் கண்டால் நீ
அஞ்சுவதாகத் தெரியவில்லையே”

“நாம் யார்க்கும் குடியல்லோம்”

“நாவுக்கரசர் போல் பேசுகிறாயே”

“தேவாரப்பாடல் கேட்டுப் பழக்கம்”

“கலையுள்ளம் படைத்த நீ கடமை செய்வதற்குத் தகுதியில்லை”

“இந்தக் கிழவி என்னையே வேண்டினாள்; அவள் வேண்டுகோளை மறுக்க இயலவில்லை”.

“அதிகப் பிரசங்கியாக இருக்கிறாய் நீ
கோயிலில் பிரசங்கங்கள் கேட்கும் பழக்கம் அவ்வளவுதான்”.

“இங்கே வா” என்றான்.
“அடிக்காதீர்கள்” என்றார்.

“அடியாத மாடு படியாது” என்றான்.

“மனிதனை மனிதனாக நடத்துவதுதான் மரியாதை” என்றான்.

“உனக்கு என்ன மரியாதை வேண்டி இருக்கிறது; கொடுத்த வேலை செய்யவில்லை; மரியாதையாகத் தட்டைத் தலையில் வை; வெட்டியில் மண்ணைத் தோண்டு; கரை கட்ட முயற்சி செய்”

“எனக்கு அக்கரை இல்லை” என்றான்.

பிரம்பால் ஓர் அடி முதுகில் வைத்தான்; அடுத்த வினாடி அவன் தலையில் வைத்திருந்த கூடையோடு மண்ணைக் கரையில் போட்டு உரு மறைந்தான். கரை ஏறியது; கட்டி முடித்தாகி விட்டது; ஆனால் இறை அங்கு இல்லை.

பிரம்படி அவன் முதுகில் பட்டது; அது இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள எல்லா ஜீவன்கள் மீதும் பட்டுப் பாண்டியனின் முதுகிலும் பட்டது. அவன் அருகில் இருந்த அமைச்சர் மீதும் பட்டது; சுவர்களில் உள்ள சித்திரங்களிலும் பட்டது;

பாண்டியன் தான் செய்த தவற்றை உணர்ந்தான். வந்தவர் சோமசுந்தரக் கடவுள் என்பதை அறிந்து வருந்தினான். தெய்வ வாக்கு வானில் எழுந்தது. பாண்டியன் செய்த தவற்றைச் சுட்டிக் காட்டியது.
வந்திக்கு விமானம் வந்தது; அவளுக்கு வானவர் வரவேற்புத் தந்தனர். விண்ணுலகவாசியாக அவள் அங்கு அனுமதிக்கப்பட்டாள்.

மாணிக்க வாசகரிடம் அரிமர்த்தன பாண்டியன் சென்று வணங்கித் தன்னை மன்னிக்கும்படி வேண்டினான்: “எல்லாம் இறைவன் திருவிளையாடல்” என்று கூறி அரசனிடம் அமைச்சர் பதவியிலிருந்து விலகி நின்றார்:

திருவாசகம் பாடித் தெய்வ அருள் வாக்கைப் பரப்பினார் சிதம்பரம் சென்று நடனத் தலைவனைக் காண விடைபெற்று மதுரையை விட்டு நீங்கினார். அரசனின் தொடர்பு நீங்கி ஆனந்தத் தாண்டவம் ஆடும் பேரின்பப் பொருளையே நினைத்து அல்லும் பகலும் அவன் புகழ்பாடி இறையுணர்வு நிரம்பியவராக வாழ்ந்தார்.

அங்கே சோழ அரசனின் மகள் ஊமையாக இருந்தாள். அவளைப் பேச வைத்தார். புத்தர்களோடு வாதிட்டு வென்று சைவ சமயத்தை நிலைநாட்டினார். தமிழும் சைவமும் தழைக்க அவர் பணி தொடர்ந்தது; அங்கேயே அவர் முத்தி நிலையையும் அடைந்தார்.


61. மண் சுமந்த படலம் – திருவிளையாடற்
புராணம்

Related Post

47. கரிக்குருவிக்கு உபதேசஞ் செய்த படலம்

Posted by - ஏப்ரல் 17, 2020 0
திருவிளையாடற் புராணம் 47. கரிக்குருவிக்கு உபதேசஞ் செய்த படலம் 47. கரிக்குருவிக்கு உபதேசஞ் செய்த படலம் இராசராசனுக்குப்பின் அவன் மகன் சுகுண பாண்டியன் ஆட்சிக்கு வந்தான். அவன்…

38. உலவாக் கோட்டை அருளிய படலம்

Posted by - ஏப்ரல் 17, 2020 0
திருவிளையாடற் புராணம் 38. உலவாக் கோட்டை அருளிய படலம் 38. உலவாக் கோட்டை அருளிய படலம் நல்லான் என்ற வேளாளன் ஒருவன் மதுரையில் வாழ்ந்து வந்தான். அவன்…

43. பலகையிட்ட படலம்

Posted by - ஏப்ரல் 17, 2020 0
திருவிளையாடற் புராணம் 43. பலகையிட்ட படலம் 43. பலகையிட்ட படலம் பாணபத்திரன் செல்வம் வந்தபோதும் அவன் சிவனை வணங்குவதில் குறைந்தது இல்லை; நடு இரவிலும் சென்று யாழிசை…

23. விருத்த குமார பாலரான படலம்

Posted by - ஏப்ரல் 17, 2020 0
திருவிளையாடற் புராணம் 23. விருத்த குமார பாலரான படலம் 23. விருத்த குமார பாலரான படலம் விக்கிரமன் ஆட்சி செய்து வரும் நாளில் மதுரையில் விருபாக்கன் என்னும்…

34. விடை இலச்சினை இட்ட படலம்

Posted by - ஏப்ரல் 17, 2020 0
திருவிளையாடற் புராணம் 34. விடை இலச்சினை இட்ட படலம் 34. விடை இலச்சினை இட்ட படலம் சோழனுக்கும் பாண்டியனுக்கும் அக்காலத்தில் நல்லுறவு இல்லாமல் இருந்தது. பொதுவாகச் சோழர்கள்…

உங்கள் கருத்தை இடுக...