44. இசைவாது வென்ற படலம்

411 0

திருவிளையாடற்
புராணம்

44. இசைவாது வென்ற படலம்

44. இசைவாது வென்ற படலம்

வரகுணன் ஆட்சி முடிந்தபின் அவன் மகன் இராகராசன் அரியணை ஏறினான். அவன் இன்பத்துறையில் எளியனாக நடந்து கொண்டான்; கட்டிய மனைவியர் இருந்தும் புதுமை விரும்பிய அவன் பதுமை நிகர் அழகியரைக் காமக் கிழத்தியராகக் கொண்டான். அவர்களுள் ஒருத்தி சங்கீதப் பிரியள்; பாடுவதிலும் வல்லவள்.

பாணபத்திரனின் மனைவி பாடிப் புகழ்பெற்றவள். அவ்ளைச் சாடி அவளோடு மோதிக் கொண்டாள்; பாணபத்திரன் மனைவியின் மீது பொறாமைகொண்டாள். பாண்டியனிடம் தன் மோதலை எடுத்துச் சொல்லி அவள் ஆணவத்தை அடக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டாள். இன்பம் தரும் காமக் கிழத்தியை மகிழ்விக்க அவன் விரும்பினான். ஈழ நாட்டில் இருந்து இசைபாடும் விறலி ஒருத்தியை வரவழைத்து அவளை ஊக்குவித்தான்.

விறலியை அழைப்பித்து நீ பாணபத்திரனின் மனைவியை இசைவாதுக்கு அழை; அதற்கு இசையாது இருந்தால் வம்புக்கு இழு; மறுத்தால் வசை மழை பொழிக” என்று கூறினான். அது போலப் பாணனின் மனைவியிடம் “நீ ஏனோ தானோ என்று இருக்காதே. ஈழ நாட்டுக்காரி அவள் இசைவாதுக் கழைத்தால் முடியாது; என்று சொல்லாதே பாட ஒப்புக்கொள்” என்றான். இருவரையும் மூட்டிவிட்டான். இசைப் போட்டி நடந்தது; ஈழ மகளே வெற்றி பெற்றதாக அரசன் ஒரு சார் தீர்ப்புக் கூறினான். அதை அவையோரும் ஆமோதித்தனர்.

“கவர்ச்சியால் தவறாகத் தீர்ப்பு அளித்தாய்; அவள் அழகி என்பதை ஒப்புக்கொள்கிறேன்; ஆனால் இசையரசி அல்ல” என்றாள்.

“மற்றொரு நாள் பாட வை; பார்க்கலாம்’ என்றாள்”
பாடினி.

மறுநாளும் அதே தீர்ப்பு வழங்கப்பட்டது “மகேஸ்வரன் தீர்ப்புத்தான் ஏற்றுக் கொள்ள முடியும்; கோயில் முன் பாடுவோம்; அங்கே இந்த மகாசபையர் ஆண்டவனுக்கு அஞ்சித் தீர்ப்புக் கூறுவர்; நீயும் நடுநிலை பிறழ மாட்டாய்” என்றாள்.

“அப்படியானால் தோற்பவர் மற்றவர்க்கு அடிமை இதற்கு ஒப்புக்கொள்கிறாயா?” என்று அரசன்கேட்டான்.

“ஆண்டவனுக்கு அடிமையாகிவிட்ட என்னை யாரும் அடிமைப்படுத்த முடியாது. இறைவன் என்னைக் கைவிட மாட்டான்” என்றாள் பாடினி.

பாடினி இறைவன் திருக்கோயில்சென்றுமுறையிட்டாள்.
“கவலற்க பாடட்டும்; நாம் வந்து உதவுவோம்” என்று வாக்கு எழுந்து அவளை ஊக்குவித்தது.

இறைவன் இசைப்புலவர் வடிவில் அவையில் வந்து
அமர்ந்தார். மூன்றாம் நாள் முடிவு கூறுவது நிச்சயம் என்று அனைவரும் காத்திருந்தனர்.
முதலில் விறலி பாடினாள்; அது கேட்க இனிமையாகவே இருந்தது; இருக்கையில் இருந்தவர்கள் அவள் பாடிய பாட்டுக்குக் காது கொடுத்தார்கள்.

பாடினி இறைவனை நினைத்துப் பாடிய பாட்டு நெஞ்சை உருக்கியது.

மிடற்று அசைவே இல்லாமல் தலையும் ஆட்டாமல் கண் இமைக்காமல் பல் வெளிப்படாமல் புருவம் நிமிராமல் கன்னம் தடியாமல் பாடிய மிடற்றிசை கேட்டு அவையோர் வியப்பும் திகைப்பும் மகிழ்வும் அடைந்தனர். பாண்டியனும் ஒருசார் பேச நினைத்தவன் கோயில் திருச்சபையில் நிலை தடுமாறவில்லை; முன்னே இருந்து இசைப்புலவனாக வந்த சோமசுந்தரரின் பார்வை அவன் மீது பட்டது; அது அவன் நெஞ்சைக் சுட்டது; அவன் காமவல்லியிடம் கொண்டிருந்த பற்று கெட்டது: கைதட்டி ஆரவாரித்துப் பாடினியைப் பாராட்டியது வானத்தைத் தொட்டது.

யாழிசைபாடும் ஈழநாட்டுப் பெண் தோல்வியை ஏற்றுப் பாடினி ஏறி அமரத் தோள் கொடுத்தாள். பாடினி வெற்றி அடைந்தும் அவள் ஆரவாரத்தைக் காட்டவில்லை. அவளை ஊக்குவித்த காமக்கிழத்தி வாயடங்கிப் போனாள். அரசனைத் தவறான பாதையில் திருப்பியதற்கு நாணினாள்.

வெளிநாட்டில் இருந்து அழைத்து வந்த ஈழத்து இசைக்காரியை அவமானப் படுத்தாமல் அவளுக்கு வேண்டியபொருள் கொடுத்துச் சமாதானப்படுத்தினான். பாடினிக்குப் பொருளே அன்றி வரிசைகள் தந்து சிறப்புச் செய்தான்.

44. இசைவாது வென்ற படலம் – திருவிளையாடற்
புராணம்

Related Post

11. உக்கிரகுமாரன் திரு அவதாரப்படலம்

Posted by - ஏப்ரல் 18, 2020 0
திருவிளையாடற் புராணம் 11. உக்கிரகுமாரன் திரு அவதாரப்படலம் 11. உக்கிரகுமாரன் திரு அவதாரப்படலம் காஞ்சனையும் மலையத் துவசனும் துறக்க வாழ்வு அடைந்ததால் நாடாளும் பொறுப்பை விட்டு விலக…

2. வெள்ளை யானை சாபம் தீர்த்த படலம்

Posted by - ஏப்ரல் 18, 2020 0
திருவிளையாடற் புராணம் 2. வெள்ளை யானை சாபம் தீர்த்த படலம் 2. வெள்ளை யானை சாபம் தீர்த்த படலம் ஆசிரியனை மதிக்காமல் அவதிப்பட்ட இந்திரன் மறுபடியும் ஒரு…

38. உலவாக் கோட்டை அருளிய படலம்

Posted by - ஏப்ரல் 17, 2020 0
திருவிளையாடற் புராணம் 38. உலவாக் கோட்டை அருளிய படலம் 38. உலவாக் கோட்டை அருளிய படலம் நல்லான் என்ற வேளாளன் ஒருவன் மதுரையில் வாழ்ந்து வந்தான். அவன்…

12. உக்கிரகுமாரனுக்கு வேல் வளை செண்டு கொடுத்த படலம்

Posted by - ஏப்ரல் 18, 2020 0
திருவிளையாடற் புராணம் 12. உக்கிரகுமாரனுக்கு வேல் வளை செண்டு கொடுத்த படலம் 12. உக்கிரகுமாரனுக்கு வேல் வளை செண்டு கொடுத்த படலம் உற்ற வயது வந்ததும் கற்ற…

23. விருத்த குமார பாலரான படலம்

Posted by - ஏப்ரல் 17, 2020 0
திருவிளையாடற் புராணம் 23. விருத்த குமார பாலரான படலம் 23. விருத்த குமார பாலரான படலம் விக்கிரமன் ஆட்சி செய்து வரும் நாளில் மதுரையில் விருபாக்கன் என்னும்…

உங்கள் கருத்தை இடுக...