84. நல்ல வைத்தியர்

அறிவு கதைகள்

84. நல்ல வைத்தியர்

செவிடன் ஒருவன் நோயாளியைப் பார்க்கப் போகிறான். போகும்போதே அவனுக்கு ஒரு யோசனை. நோயாளி சொல்வது நம் காதில் விழாதே அவன் என்ன சொல்வான், அதற்கு நாம் என்ன சொல்வது என்று தானே சிந்தித்தான்.

முதலில் நாம் போனதும் நோயாளியை, ‘நோய் எப்படி இருக்கிறது’—என்று கேட்போம். அவன், ‘கொஞ்சம் குணமாக இருக்கிறது’— என்று சொல்வான். பின் நாம் ‘ஆகாரம் என்ன’—என்று கேட்போம். அவன், ‘ஏதோ கஞ்சி’—என்று சொல்வான். நாம், யார் டாக்டர்’ என்று கேட்போம். அவன் யாராவது டாக்டர் பெயரைச் சொல்வான்.

அவற்றிற்கு ஏற்றபடி பதில் சொல்வோம். இவ்வாறு (பேச்சு நடைமுறை) முன்கூட்டியே முடிவு செய்து கொண்டே, செவிடன் நோயாளியைப் பார்க்கப்போனான் போனதும், முதற்கேள்வி—’நோய் எப்படி இருக்கிறது’ —என்று கேட்டான்.

அவன் வரவர முற்றிக் கொண்டே இருக்கிறது.’

பிழைப்பேன் என்ற நம்பிக்கையே இல்லை’ என்றான்.

செவிடன் (காதுதான் கேட்காதே) தன்திட்டப்படியே ‘நானும் அப்படித்தான் நினைத்தேன்—அதுதான் சரி விரைவில் எல்லாம் சரியாய்விடும்’—என்று சொல்லிவிட்டு, (அடுத்த கேள்வியாக) ‘ஆகாரம் என்ன உண்கிறீர்கள்?—என்று கேட்டான்,

அவனது முதல் பதிலையே கேட்டதனால் வருந்திய நோயாளி—”ஆகாரம் மண்ணுதான்” என்று மிகவும் வெறுப்புடனே கூறினான்.

(இதைக் கேளாத செவிடு) “அதையே சாப்பிடு; அதுதான் நல்ல உணவு” என்று சொன்னான்.

அடுத்து, ‘எந்த வைத்தியர் வந்து பார்க்கிறார்?’ என்று கேட்டான்.

நோயாளி (புண்பட்ட மனத்துடனே நொந்து) ‘எமன்தான் டாக்டர்—’ என எரிசலாகச் சொன்னான்.

உடனே செவிடன்,

“அவரே நல்ல டாக்டர். அவரையே வைத்துப்பாரு, அடிக்கடி வருகிறாரா?—எல்லாம் சரியாப் போய்விடும்’— என்று சொல்லித் திரும்பி வந்துவிட்டான்.

நோயாளி—துயரம் தாங்காது வருந்தினான்—இவன் செவிடன், காது கேட்காது என்பது அவனுக்குத் தெரியாது. ஆனால் செவிடனுக்குத் தன் காது செவிடு எனத் தெரியும். இதை நோயாளிக்குத் தெரிவித்திருந்தால், இருவருக்குமிடையே— இந்தத் தொல்லைகள் வளர்ந்திருக்காது.

உள்ளதை மறைத்து வீண் பெருமை பாராட்டுவதனால் நேரிடுகின்ற விளைவுகளில் இதுவும் ஒன்று.

84. நல்ல வைத்தியர்

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

   உங்கள் கருத்தை இடுக...

   வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

   Register New Account
   Reset Password