5 விருந்து, நடனம், மரணம்!

5
விருந்து, நடனம், மரணம்!

5

விருந்து, நடனம், மரணம்!

அலிபாபாவுக்கு மனத்தில் நிம்மதியில்லை. திருடர் தலைவனும், இரண்டு திருடர்களும் உயிரோடு இருந்தால், தனக்கு எப்பொழுது, என்ன நேருமோ என்று அவன் அஞ்சினான். கூடியவரை அவன் ஒதுக்கமாகவே வாழ்ந்து வந்தான். தன்னிடம் உள்ள செல்வத்தைப்பற்றியோ, தன் வீட்டில் நடந்த நிகழ்ச்சிகளைப்பற்றியோ, வெளியே எவரும் தெரிந்து கொள்ளும்படி அவன் எதையும் செய்யவில்லை.

இனி, திருடர் தலைவனைப்பற்றிக் கவனிப்போம். அவன் அலிபாபாவின் வீட்டிலிருந்து தப்பி ஓடியதும், நேரே வனத்திற்குச் சென்றான். அவனுடைய உள்ளம் உடைந்து போயிருந்தது. கூடச்சென்றிருந்த நண்பர்கள் அனைவரும் மாண்டு ஒழிந்து போய்விட்டனர். குகையிலிருந்து செல்வங்களை அள்ளிக்கொண்டு சென்றவன் மேலும் உயிரோடு உலவிக்கொண்டிருக்கிறான். அவன் எத்தனை தடவைகள் வேண்டுமாயினும் குகையிலிருந்து பொக்கிஷங்களை அள்ளிக் கொண்டு செல்லமுடியும். ஏனெனில், அவனுக்கு குகைக்குள் நுழைவதற்கு வேண்டிய மந்திரச் சொற்கள் தெரிந்திருக்கின்றன. இந்த

Alibaba 60.jpg

விஷயங்களைப் பற்றியெல்லாம் தலைவன் நெடுநேரம் யோசித்து, தானே இவற்றுக்குப் பரிகாரம் தேட வேண்டுமென்று தீர்மானித்தான். முதலில் அலிபாபாவைத் தொலைக்க வேண்டும்; பிறகு, புதிதாக வேறு துணையாட்களைச் சேர்த்துக் கொண்டு, முன் போல் வழிப்பறி, கொள்ளை முதலியவற்றை நடத்தி வர வேண்டும் என்று அவன் எண்ணமிட்டுக் கொண்டே, அன்றைய இரவுப் பொழுதைக் காட்டிலேயே கழித்தான்.

மறுநாள் காலையில், அவன் பொருத்தமான ஒரு மாறுவேடம் புனைந்து கொண்டு நகருக்குள் நுழைந்தான். முதலில் அவன் வியாபாரிகள் பலரும் தங்கக் கூடிய பெரிய சத்திரத்திற்குச் சென்றான். சத்திரத்து நிர்வாகியைக் கண்டு, அவனுடன் நீண்ட நேரம் பேசிப் பார்த்தான்.
சமீபத்தில் நகரில் ஏதாவது விசேடமான செய்தி உண்டா என்றும் கேட்டான். சத்திர நிருவாகி என்னென்னவோ கதைகளைக் கூறினாரே தவிர, அலிபாபா வீட்டு நிகழ்ச்சி களைப்பற்றி அவன் எதிர்பார்த்த செய்தி எதுவும் அவர் வாயிலிருந்து வரவில்லை. அப்பொழுது அவன், அலிபாபா தன்னைவிடச் சிறந்த மூளையுடையவன் என்று உணர்ந்தான். நகரில் ஒரு மனிதனைக் கொலை செய்தால், செய்தவனுக்கு அரசாங்க அதிகாரிகள் மரண தண்டனை விதித்து, அவன் சொத்துகளைப் பறித்துக்கொண்டு, அவனுடைய வீட்டையும் தரைமட்டம் ஆக்கிவிடுவார்கள். ஆனால், அலிபாபா ஒரே சமயத்தில் பல உயிர்களைப் பலி வாங்கியவுடன், தான் செய்த முப்பத்தேழு கொலைகளையும் மூடி மறைத்துவிட்டானே என்று தலைவன் வியப்படைந்தான். அவ்வளவு வல்லமையுடையன் கையில் தானும் எளிதில் மாட்டிக்கொண்டுவிடக்கூடாது என்று அவனும் எச்சரிக்கை யாயிருந்தான்.

அவன் கடைத் தெருவிலே ஒரு பெரிய கடையை வாடகைக்கு எடுத்து, குகையிலே இருந்த உயர்ந்த ரகமான ஜவுளிகள் முதலிய பொருள்களை அங்கே கொண்டு வைத்து வியாபாரம் செய்து வந்தான். வியாபாரத்தில் அவனுக்குப் பலருடைய பழக்கம் ஏற்பட்டது. தன்னுடன் பழகிய வியாபாரிகளை அவன் மிகுந்த அன்புடனும் மரியாதையுடனும் நடத்தி வந்தான். அந்த வியாபாரிகளில் ஒருவன் அவன் கடைக்கு எதிர்ப்பக்கம் கடை வைத்திருந்தான். அவன்தான் அலிபாபாவின் சகோதரனான காஸிமின் மைந்தன். அவனிடத்தில் திருடர் தலைவனுக்கு அலாதியான அன்பு இருந்து வந்தது. அவனுக்குத் தலைவன் அடிக்கடி விருந்துகளும் நடத்தினான். அவனும் தலைவனுக்கு தானும் விருந்தளிக்க விரும்பினான். அவனுடைய வீடு சிறிதாகவும், வசதியில்லாமலும் இருந்ததால், அவன் தன் சிற்றப்பனான அலிபாபாவிடம் தன் வீட்டிலேயே விருந்து தயாரிப்பதாயும், வெள்ளிக்கிழமை யன்று மாலை அந்தப் புதிய வணிக நண்பனை அழைத்து வரும்படியும் கூறினான். விருந்து என்று முன்னதாக அறிவிக்காமல், நண்பனுடன் உலவச் செல்லும்பொழுது
அவனை அங்கே அழைத்து வரும்படியும் அவன் ஆலோசனை சொன்னான்.

திருடர் தலைவன் குவாஜா ஹஸன் என்று பெயர் வைத்துக்கொண்டிருந்தான். காஸிமின் மகன் யார் என்பது முதலில் பல நாள் அவனுக்குத் தெரியாமலிருந்தது. பின்னர், ஒருநாள் அலிபாபா தன் அண்ணன் மகனைப் பார்க்க வந்திருந்தான். அப்பொழுது ஹஸன் அவனை யாரென்று தெரிந்துகொண்டு, பின்னால், காஸிம் மகனிடம் அவன் யார் என்று வினவினான். அந்தப் பையன் விவரம் தெரியாமல், “அவர் என் தந்தையின் உடன்பிறந்தவர்” என்று சொல்லிவிட்டான். அதிலிருந்துதான் போலி வியாபாரியான ஹஸன் அவனுடன் அதிகமாக அளவளாவிப் பழகி வந்தான்.
வெள்ளிக்கிழமையன்று கடையடைப்பு ஆதலால், காஸிமின் குமாரன் தன் நண்பன் குவாஜா ஹலனை அழைத்துக்கொண்டு, மாலை நேரத்தில் வெளியே உலவச் சென்றிருந்தான். இரவுவரை அவர்கள் பூந்தோட்டங்களில் தங்கியிருந்துவிட்டுத் திரும்பி வரும்பொழுது, ஹஸ்னைத் தன்னுடன் ஒரு வீட்டிற்குள் வருமாறு இளைஞன் அழைத்தான். அது அலிபாபாவின் இல்லம். இளைஞன், “என் சிறிய தந்தைக்குத் தங்களைப்பற்றி நான் சொல்லியிருப்பதால், அவரும் தங்களைப் பார்க்க ஆவலாயிருக்கிறார். வாருங்கள்!” என்று அழைத்தான். ஹஸன் முதலில் இனங்காவிட்டாலும், பின்னர் மகிழ்ச்சியோடு இணங்குவதாகப் பாவனை செய்துகொண்டு, வீட்டுக்குள்ளே சென்றான். இப்படியாவது பகைவனின் வீட்டுக்குள் செல்லும் வாய்ப்புக் கிடைத்ததே! என்று அவன் உள்ளுக்குள் குதுாகலமாயிருந்தான். அவர்கள் உள்ளே வந்ததும், அலிபாபா ஹஎலனை உபசாரத்துடன் வரவேற்று, வணக்கம் கூறி, அவனுடைய உடல் நிலை, வர்த்தக வளர்ச்சிபற்றியெல்லாம் விசாரித்தான். “தாங்கள் என் சகோதரன் மைந்தனிடத்தில் என்னைவிட அபிமானம் வைத்திருப்பதாக அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். உங்களுக்கு மிக்க வந்தனம்!” என்றும் அவன் கூறினான். ஹஸனும் அவனை வணங்கி இனிய உரைகள் பகர்ந்தான். இருவரும் ஆசனங்களில் அமர்ந்து சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். ஹஸன் காஸிமின் குமாரனைப் பாராட்டிப் பேசினான். “இவன் பார்வைக்கு இளைஞனாயிருந்த போதிலும் ஆண்டவன் அருளால், புத்தியில் 
முதியவனாக விளங்குகிறான்; இவனிடத்தில் எனக்கு அளவற்ற அன்பு உண்டு. இவன் என் உள்ளத்தைக் கவர்ந்தவன்!” என்றான்.

அந்நிலையில் அவன் எழுந்து நின்று, தான் தன் வீட்டுக்குச் செல்ல விடை கேட்டான். “நான் தங்கள் அடிமை. இன்ஷா அல்லாஹ் (ஆண்டவன் விரும்பினால்) நான் மறுபடியும் ஒருமுறை இங்கு வருகிறேன்!” என்று அவன் கூறினான். அலிபாபா, அவனை வெளியே செல்ல விடவில்லை. “நண்பரே! எங்களுடன் அமர்ந்து ஒருவேளை உணவு உண்ணாமல் தாங்கள் வெளியேறுவது நன்றாயில்லை! சாப்பிட்டுவிட்டுத் தாங்கள் வீட்டுக்குச் செல்லலாம்! நாங்கள் தயாரிக்கும் உணவுகள் தாங்கள் வழக்கமாக அருந்தும் சுவையுள்ள அமுதுக்கு ஈடாக இருக்கமாட்டா. ஆயினும் எங்களுடைய திருப்திக்காகத் தாங்கள் எங்களுடன் அமுது செய்ய வேண்டுகிறேன்!” என்று அவன் ஹஸனைக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டான்.

ஹஸன், “உங்களுடைய அன்புக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். ஆயினும், நான் உங்கள் வீட்டு உணவுகளைச் சாப்பிட முடியாது. சமீபத்தில் வைத்தியர் அவ்வாறு எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார்!” என்று கூறினான். “என்ன காரணத்திற்காக வைத்தியர் கட்டளையிட்டார்? என்ன உணவை உண்னக்கூடாதென்று சொல்லியிருக்கிறார்?” என்றெல்லாம் அலிபாபா துளைத்துக்
கேட்டான். அப்பொழுது ஹஸன், “உப்புள்ள பண்டங்களை நான் உண்ணக்கூடாது என்பதுதான் வைத்தியர் கட்டளை!” என்றான். உடனே அலிபாபா, ‘இவ்வளவுதானா! இன்னும் சமையல் முடியவில்லை. நான் உள்ளேபோய் உப்பில்லாமலே பதார்த்தங்களைத் தயாரிக்கச் சொல்லி விடுகிறேன்!” என்று சொல்லி, உள்ளே ஓடிச் சென்றான். அங்கு மார்கியானா விடம், இறைச்சி முதலிய எதிலும் உப்பு போடாமலே சமைக்கும்படி சொன்னான். அதைக் கேட்டு அவள் “உப்பில்லாமல் உண்ணக்கூடிய விருந்தாளி யார் வந்திருக்கிறார்?” என்று கேட்டாள். “யாராயிருந்தாள் உனக்கென்ன? உப்பு வேண்டாமென்றால், என் கட்டளைப்படி நீ செய்!” என்று அவன் உத்தரவிட்டதும், அவளும், அப்படியே ஆகட்டும்! என்று சொல்லி விட்டாள். அலிபாபா முன் வாயிலுக்குப் போய் விருந்தாளியுடன் பேசிக் கொண்டிருந்தான்.

மார்கியானாவுக்கு உப்பில்லாமல் உண்ணும் அந்த விசித்திரமான விருந்தாளியைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல். அவள், விரைவாகச் சமையல் வேலைகளை முடித்துக்கொண்டு, அடிமை அப்துல்லாவின் உதவியால், மேசைகளின்மீது தட்டுகளையும், உணவுகளையும் எடுத்து வைத்துவிட்டு, முன்புறம் சென்றாள். அங்கே ஹஸ்னைக் கண்டதும், அவன் யார் என்பதை அவள் உடனே தெரிந்து கொண்டாள். பழைய சைத்தானே புது உடைகளில் வந்திருக்கிறான் என்பதை அவள் உணர்ந்தாள். அவனுடைய உடைக்குள் ஒரு வாள் மறைத்து வைக்கப் பட்டிருப்பதையும் அவள் கவனித்தாள். ஒகோ இதற்காகத்தான் இந்தத் துரோகி உப்பு வேண்டா என்று சொல்லியிருக்கிறான்! உப்பிட்டவரைக் கொல்லக்கூடாது என்ற சாஸ்திரப்படி நடக்கிறான் போலிருக்கிறது! என் முதலாளியைக் கொல்லவே இவன் வந்திருக்கிறான். ஆனால், அதற்குமுன் இந்த நீசனையே பரலோகத்திற்கு அனுப்பி விடுகிறேன்! என்று அவள் தனக்குள்ளே
எண்ணிக்கொண்டாள்.

அலிபாபாவும், ஹஸனும் உணவருந்தியபிறகு, அப்துல்லா மார்கியானாவை அழைத்து வந்தான். அவள் மேசைகளைத் துடைத்து, புதிதாக வந்த பழங்களையும், உலர்த்தி வைத்திருந்த கனி வகைகளையும் எடுத்து வைத்தாள். பின்னர், திராட்சையைப் பிழிந்து தயாரிக்கப்பெற்றிருந்த உயர்ந்த மதுவையும் , கிண்ணங்களையும் எடுத்து வைத்துவிட்டு, அவள் அப்துல்லாவை அழைத்துக்கொண்டு வேறு ஓர் அறைக்குள்ளே சென்றாள். அவர்கள் உணவருந்தப் போயிருப்பதாக ஹஸ்ன் எண்ணிக்கொண்டான்.

அப்பொழுது அவன் தன் காரியம் நிறைவேறும் தருணம் நெருங்கிவிட்டதை உணர்ந்தான். “என் வஞ்சத்தைத் தீர்த்துக்கொள்ள இதுவே சமயம்! ஒரே வெட்டில் இந்தப் பயலைப் வீழ்த்தி விடுவேன்! இவன் அண்ணன் மகன் என்னைத் தடுக்கமுடியாது. அவன் தலையிட்டால், அவனையும் வாளுக்கு இரையாக்க வேண்டியதுதான்! ஆனால், இந்த வேலைக்காரியும்,

Alibaba 67.jpg

பையனும் உணவுண்டு, சமையலறையில் போய்ப் படுக்கும் வரை நான் பொறுத்திருக்க வேண்டும். பிறகு, ஒரு நொடியில் வேலையை முடித்து விட்டு, தோட்டத்தின் வழியாக வெளியே ஓடி விடலாம்! என்று அவன் தனக்குள்ளே சிந்தித்துக் கொண்டான்.

அடுத்த அறையிலிருந்த மார்கியானா கதவின் இடுக்கு வழியாக அவனைக் கவனித்துக் கொண்டே தன் உடைகளை மாற்றிக் கொண்டிருந்தாள். நடனத்திற்குரிய சல்லடம், சரிகைத் தாவணி, மஸ்லின் முகத் திரை, காற் சலங்கைகள், பட்டுத் தலைப்பாகை முதலியவற்றை அவள் வேகமாக அணிந்து கொண்டாள். அவற்றுடன், இடுப்பில் பளபளப்பான தங்கச் சரிகையிலே செய்த அரைக் கச்சை கட்டி, அதில் ஒரு பிச்சுவாவையும் செருகிக் கொண்டாள். அப்துல்லாவைப்
பார்த்து அவள், “விருந்தினருக்காக நாம் நடனமாட வேண்டும்!” உன் கஞ்சிராவை எடுத்துக்கொள்!” என்றாள்.

சிறுவன் கஞ்சிராவை குலுக்கிக்கொண்டு, முன்னே சென்றான். மார்கியானா ஜல்ஜல் என்று காற்சலங்கைகள் ஒலிக்க, ஒய்யாரமாக அவனைத் தொடர்ந்து சென்றாள். இருவரும் விருந்தினர் அறைக்குள் புகுந்து, தலை வணங்கி விட்டு, ஒதுங்கி நின்றனர். அவர்களைக் கண்டதும் அலிபாபா மகிழ்ச்சியடைந்து, “சரிதான், விருந்தில் நடனமும் அவசியம்தான், நடக்கட்டும்!” என்றான். குவாஜா ஹஸன், “பிரபுவே, அறுசுவை உண்டிக்குப்பின் ஆனந்த நடனமும் அளிக்கிறீர்கள்!” என்று மெச்சினான். உடனே, அப்துல்லா கஞ்சிராவைத் தட்டி முழங்கத் தொடங்கினான். அவனுடைய தாளங்களுக்கு ஏற்ப, கட்டழகி மார்கியானா, தோகை மயில்போல் துள்ளிக் குதித்து ஆடினாள். அவளுடைய ஆட்டமும் வளைவுகளும் குழைவுகளும் கண்களைக் கவர்வனவாயிருந்தன. சிறிது நேரத்திலேயே அவள் நடனக்கலையில் தனக்கிருந்த பயிற்சியைத் தெளிவாகக் காட்டிவிட்டாள். பின்னர், தாளம் மாறியவுடன், அவள் இடையிலிருந்த பிச்சுவாவை உருவி வலக்கையிலே வைத்துக்கொண்டு புதிய நடனம் ஒன்றை ஆடிக்காட்டினாள். வலக்கையிலே அந்தக் கூரிய ஆயுதம் பளபளவென்று ஜொலித்துக்கொண்டிருந்தது. அதை ஏந்தியவண்ணம் அவள் வலப்புறமும் இடப்புறமும் சாய்ந்து. நிமிர்ந்து, ஒடி. அங்கே வீற்றிருந்தவர்கள்
அருகிலே சென்று சில அபிநயங்கள் காட்டினாள். நேரம் செல்லச் செல்ல, ஆட்டத்தின் வேகம் அதிகரித்தது. அவள் பம்பரம்போல் சுழன்றாள். அலிபாபாவும் ஹஸனும், வைத்த கண்ணை வாங்காமல், அவளையே பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர். அவள் உடலைக் குலுக்கி ஆடிக் கொண்டே, அப்துல்லாவிடம் இருந்த கஞ்சிராவை வாங்கி, இடக்கையிலே வைத்துக்கொண்டு பிச்சுவாவின் முனையை அதற்கு நேரே பிடித்துக் காட்டினாள். பிறகு, பிச்சுவாவைத் தன் மார்புக்கு நேரே பிடித்தாள். உடனே, அலிபாபாவிடம் சென்று, சில நிமிடங்கள் ஆடினாள். அதேபோல் ஹஸனிட மும் நின்று ஆடினாள். அவளுடைய கண்களும் கால்களும் கைகளுமே பேசத் தொடங்கியவை போல் இருந்தன. இவ்வாறு சிறிது நேரம் ஆடியபின் அவள் நடனத்தை நிறுத்திக்கொண்டு, உடலை வளைத்து, அலிபாபாவிடம் கஞ்சிராவை நீட்டினாள். அவன் உடனே ஒரு தங்கக் காசை அதிலே வைத்தான். அடுத்தாற்போல் காஸிமின் மகனும் ஒரு காசை எடுத்து அதிலே போட்டான். பிறகு, மார்கியானா கஞ்சிராவை ஹஸன் பக்கமாக நீட்டினாள். அவன் இடுப்பிலிருந்த பணப்பையை எடுப்பதற்காகத் தலையைக் குனிந்துகொண்டு, தன் அரைக் கச்சையை இரண்டு கைகளாலும் தடவிப் பார்த்தான். அந்த நேரத்தில் மார்கியானா, அவளுக்கே உரித்தான உறுதியுடன், வலக்கையிலே பிடித்திருந்த பிச்சுவாவை ஓங்கி அவன் நெஞ்சிலே குத்தி இறக்கிவிட்டாள்! அந்தக் கணத்திலேயே அவன் தரையிலே சுருண்டு விழுந்து மாண்டு போனான். 

“அடி பாதகி என்ன வேலை செய்துவிட்டாய்! இம்மையிலும் மறுமையிலும் எனக்கு நீங்காத பழியை உண்டாக்கிவிட்டாயே!” என்று அலிபாபா அலறித் துடித்தான்.

“உங்களைக் காப்பாற்றவே இவனை வீழ்த்தினேன்! இவனுடைய அங்கியைத் துக்கிப் பார்த்தால் பழியும் பாவமும் புலனாகும்!” என்றாள் மார்கியானா.

அலிபாபா அவனுடைய உடைகளைச் சோதனை செய்தான். அவைகளின் உள்ளே நீண்ட வாள் மறைந்திருந்தது!

அப்பொழுது மார்கியானா கூறியதாவது: “இந்த ஐயாவை உங்களுக்குத் தெரியவில்லையா? இந்த வஞ்சகன் தான் உங்களுடைய பகைவன்! நன்றாக இவனை உற்றுப் பாருங்கள்! இவனே எண்ணெய் வியாபாரி; இவனே திருடர்களின் தலைவன்! உங்கள் உயிரைப் பலிவாங்க வந்த இவன், அதற்காக உங்கள் உப்பை உண்ண மறுத்தான்! நீங்கள் உணவில் உப்பைப் போடவேண்டா என்று சொன்னவுடனேயே, இவன் உங்கள் உயிருக்கு உலைவைக்க வந்தவன் என்பதை நான் உணர்ந்து கொண்டேன். நான் நினைத்ததே சரி என்பது ஆண்டவன் அருளால் வெளியாகி விட்டது!”

உடனே அலிபாபா, அவளுக்குப் பல முறை நன்றி கூறி, “இரண்டு தடவைகள் என் உயிரை நீ காப்பாற்றி விட்டாய்! உனக்கு நான் என்ன கைம்மாறு செய்யமுடியும்? இன்று முதல் நீ அடிமைப்பெண் அல்லள். இப்பொழுதே உனக்குச் சுதந்தரம் அளிக்கிறேன்!” என்று சொல்லி, அன்போடு அவள் கையைப் பிடித்துக்கொண்டு, “உனக்கு என் மகனையே பரிசாக அளிக்கிறேன்! உன் விசுவாசத்திற்கு நன்றியாக அவன் உன்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்!” என்றான். பிறகு, அவன் தன் சகோதரன் மகனைப் பார்த்துப் பேசிலானான் : “நீ நான் சொல்வதுபோல் நடக்க வேண்டும். இந்த மார்கியானாவையே திருமணம் செய்துகொள். கடமைக்கும், உண்மையான அன்புக்கும். இவள் எடுத்துக்காட்டாக விளங்குபவள். இவர் மாதர்குல விளக்கு. அதோ விழுந்து கிடக்கும் குவாஜா ஹஸன் உன்னிடம் நட்புக் கொண்டு உறவாடியதன் இரகசியம் இப்பொழுது உனக்குப் புரிகிறதா? உன் உயிரைப் பலி வாங்கவே அவன் உன்னைப் பற்றிக் கொண்டிருந்தான். ஆனால், இந்தப் பெண்ணுடைய மதி நுட்பமும் சமயோகிதயுக்தியும் நம்மைக் காப்பாற்றிவிட்டன!

இளைஞன், தந்தை சொல்லைத் தலைமேல் தாங்கி உடனேயே, ‘தங்கள் விருப்பப்படி மார்கியானாவை மணந்து கொள்கிறேன்” என்றான்.

பிறகு, அம்மூவரும் சேர்ந்து மிகவும் கவனமாக அங்கிருந்த பிணத்தைத் தூக்கித் தோட்ட்த்திற்கு எடுத்துச் சென்று. அங்கே அதைப் புதைத்துவிட்டனர். அன்று முதல் பின்னால் பல ஆண்டுகள் கழிந்தும் அந்த விஷயம் வெளியே யாருககும் தெரியாமல் மறைந்து போய்விட்டது.

சில நாள்களுக்குப்பின் காஸிமின் மகனுக்கும் மார்கியானாவுக்கும் கோலாகலமாத் திருமணம் நடந்தேறியது.
அலிபாபா, காஸிமின் மகனை அண்ணன் மகன்தானே என்று வேற்றுமை பாராட்டாமல், அவனுக்காகப் பெரு நிதியைச் செலவழித்து விருந்துகள், நடனக் கச்சேரிகள் முதலியவற்றை முறைப்படி நடத்தி வைத்தான். விருந்தினர் பலருக்கும் மார்கியானாவின் வீரமும் தீரமும் உறுதியும் மதிநுட்பமும் தெரிந்திராத போதிலும், உத்தமமான அந்தப் பெண்ணுக்கு அலிபாபா சுதந்தரம் அளித்துத் தன் குடும்பத்திலேயே அவள் தங்கியிருக்கும்படியும் செய்ததை அவர்கள் மிகவும் பாராட்டிப் புகழ்ந்தனர்.

அதுமுதல் அலிபாபாவுக்கு மேலும் மேலும் தொழிலில் வெற்றி கிடைத்து வந்தது. அவன் தொட்டவையெல்லாம் பொன்னாக விளைந்தன. அதிருஷ்டம் புன்னகையோடு அவனுடன் ஒட்டிக் கொண்டேயிருந்தது. அவன் மேற் கொண்டு வனத்திற்குச் செல்லவோ, திருடர்களின் பொக்கிவடிக் குகையைப் பார்க்கவோ மனமில்லாமல், நெடுங்காலம் அஞ்சிக் கொண்டிருந்தான். ஏனெனில், நாற்பது திருடர்களில் இன்னும் இருவருடைய கதி என்ன ஆயிற்று என்பதை அவன் தெரிந்துகொள்ள முடியவில்லை. அந்த இருவரும் தன்னைப் பழிவாங்கக்கூடும் என்று அவன் கருதியிருந்தான். ஆனால், நாள்கள் செல்லச் செல்ல, அவன் ஒருமுறையாவது போய்க் குகையைப் பார்த்து வரவேண்டுமென்று விரும்பினான். அவன் தன் குதிரையில் ஏறிக் கொண்டு, குகைக்கு சென்று, முன் போலவே “ஒ ஸிம் ஸிம், திற!” என்று சொன்னான். உடனே வாயிற்பாறை நகர்ந்துவிட்டது. அவன் உள்ளே சென்று பார்க்கையில் முன்பு காஸிமின் உடலை அவன் துக்கிக்கொண்டு செல்லும்பொழுது எல்லாப் பொருள்களும் எப்படி எப்படி இருந்தனவோ அப்படி அப்படியே இருக்கக் கண்டான். ஆகவே, இனிமேல் தனக்குத் திருடர்களின் பயமே இல்லையென்றும் அவன் உணர்ந்தான். மேலும், குகையைத் திறக்கும் ‘ஸிம் ஸிம்’ மந்திரம் தெரிந்தவன் உலகிலே அவன் ஒருவன்தான் என்றும் ஆகிவிட்டது. குகைக்கு வந்தமட்டிலும், வெறுங்கையோடு திரும்ப வேண்டாமென்று, அவன் தன் குதிரை சுமக்கக்கூடிய அளவுக்குப் பொற்காசுகளை அள்ளிக் கட்டிக்கொண்டு திரும்பிச் சென்றான்.

பிற்காலத்தில் அவன் தன் பிள்ளைகளையும், பேரப் பிள்ளைகளையும் குகைக்கு அழைத்துக்கொண்டு போய் எல்லாவற்றையும் காட்டினான். குகையைத் திறக்கவும் அடைக்கவும் பயன்படும் மந்திரச் சொற்களையும் அவர்களுக்கு மனப்பாடம் செய்து வைத்தான். இவ்வாறு, அலிபாபாவும், அவன் குடும்பத்தினரும், என்றும் வற்றாத செல்வத்துடன், நகரத்திலே பல மேன்மைகளையும் பெற்று. இன்பமாக வாழ்ந்து கொண்டிருந்தனர்.

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

   உங்கள் கருத்தை இடுக...

   வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

   error: Content is protected !!
   தமிழ் DNA
   Logo
   Register New Account
   Reset Password
   Shopping cart