புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம்- 91. எமக்கு ஈத்தனையே!

479 0

புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம்

புறம்
91. எமக்கு ஈத்தனையே!

பாடியவர்: அவ்வையார். அவ்வையாரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 87 – இல் காணலாம்.

பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி. அதியமானைப் பற்றிய குறிப்புகளை பாடல் 87-இல் காணலாம்.

பாடலின் பின்னணி: ஒரு சமயம், அதியமான் வேட்டைக்குச் சென்றான். சென்றவிடத்து, ஒரு மலை உச்சியில் இருந்த நெல்லிமரத்தில் ஒரு அருங்கனி இருந்தது. அந்நெல்லிக்கனியை உண்பவர் நெடிது வாழ்வர் என்ற நம்பிக்கை நிலவி இருந்தது. அதியமான் அந்த அரிய நெல்லிக்கனியைத் தான் உண்ணாமல் அவ்வையார்க்கு அளித்து அவரை உண்பித்தான். அந்நெல்லிக்கனியை உண்பவர் நெடிது வாழ்வர் என்று தெரிந்திருந்தும், அக்கருத்தைத் தன்னுள் அடக்கி அக்கனியைத் தான் உண்ணாமல் தனக்கு அளித்ததைப் பாராட்டி, அவ்வையார் இப்பாடலில் அதியமானை வாழ்த்திப் பாடுகிறார்.

திணை: பாடாண் திணை. ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: வாழ்த்தியல். தலைவனை வாழ்த்துதல்

வலம்படு வாய்வாள் ஏந்தி, ஒன்னார்
களம்படக் கடந்த கழல்தொடித் தடக்கை
ஆர்கலி நறவின் அதியர் கோமான்
போர்அடு திருவின் பொலந்தார் அஞ்சி
5 பால் புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
நீல மணிமிடற்று ஒருவன் போல
மன்னுக, பெரும! நீயே தொன்னிலைப்
பெருமலை விடரகத்து அருமிசை கொண்ட
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது,
10 ஆதல் நின்னகத்து அடக்கிச்,
சாதல் நீங்க, எமக்கு ஈத்தனையே.

அருஞ்சொற்பொருள்:
1.வலம் = வெற்றி; வாய் = மெய்ம்மை, கூர்மை; ஒன்னார் = பகைவர். 2. தொடி = வளையல்; கடத்தல் = வெல்லுதல்; தடக்கை = பெரிய கை. 3. ஆர்கலி = மிகுந்த ஒலி, ஆரவாரம்; நறவு = கள். 4. பொலம் = பொன்; தார் = மாலை. 5. புரை = போன்ற; சென்னி = தலை; நுதல்= நெற்றி. 6. மிடறு = கழுத்து; ஒருவன் = கடவுள். 8. விடர் = மலைப்பிளப்பு, குகை; மிசை = உயர்ச்சி. 9. குறியாது = கருதாது. 10. ஆதல் = ஆவது.

கொண்டு கூட்டு: அதியர் கோமான்; அஞ்சி! நெல்லித் தீங்கனி குறியாது ஆதல் அகத்து அடக்கிச் சாதல் நீங்க எமக்கு ஈத்தனையே! மணிமிடற்று ஒருவன் போல மன்னுக பெரும!

உரை: வெற்றி மிகுந்த, குறி தவறாத வாளை எடுத்துப் பகைவர்களைப் போர்க்களத்தில் வென்ற கழலணிந்த காலும், வளையணிந்த பெரிய கையையும், அழன்ற கள்ளையும் உடைய அதியர் தலைவனே! பகைவர்களைப் போரில் வெல்வதால் பெறும் செல்வத்தையும் பொன் மாலையையும் உடைய அஞ்சியே! பழைய பெரிய மலைப்பிளவின்கண் அரிய உயரத்தில் இருந்த சிறிய இலையையுடைய நெல்லியின் இனிய கனியினால் விளையும் (சிறந்த) பயனைக் கூறாது தன்னுள் அடக்கிச் சாதல் நீங்க எனக்கு அளித்தாயே! நீ, பால் போன்ற பிறை நெற்றியிலே இருந்து அழகு செய்யும் தலையையும், நீலமணி போன்ற கறையுள்ள கழுத்தையும் உடைய கடவுள் (சிவன்) போல் நிலைபெற்று வாழ்க!

புறம்
91. எமக்கு ஈத்தனையே!

புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம்

Buy Book From amazon:

புறநானூறு: புதிய வரிசை வகை by பேராசிரியர் சாலமன் பாப்பையா

புறநானூறு மூலமும் உரையும் by உ.வே.சாமிநாதையர்

Related Post

புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம்- 105. சேயிழை பெறுகுவை வாள்நுதல் விறலி!

Posted by - ஏப்ரல் 13, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 105. சேயிழை பெறுகுவை வாள்நுதல் விறலி! பாடியவர்: கபிலர். இவர் பாண்டிய நாட்டைச் சார்ந்த திருவாதவூரில் அந்தணர் குலத்தில் பிறந்தவர்.…
புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 13. நோயின்றிச் செல்க!

Posted by - ஏப்ரல் 11, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 13. நோயின்றிச் செல்க! பாடல் ஆசிரியர்: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் (13, 127 – 135, 241, 374, 375).இவர்…
புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 65. நாணமும் பாசமும்!

Posted by - ஏப்ரல் 11, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 65. நாணமும் பாசமும்! பாடல் ஆசிரியர்: கழாத்தலையார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 62-இல் காண்க.பாடப்பட்டோன்: சேரமான் பெருஞ்சேரலாதன். கரிகால்…
புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 20. மண்ணும் உண்பர்

Posted by - ஏப்ரல் 11, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 20. மண்ணும் உண்பர் பாடியவர்: குறுங்கோழியூர்கிழார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 17-இல் காண்க.பாடப்பட்டோன்: சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல்…
புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 53. செந்நாவும் சேரன் புகழும்!

Posted by - ஏப்ரல் 11, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 53. செந்நாவும் சேரன் புகழும்! பாடல் ஆசிரியர்: பொருந்தில் இளங்கீரனார் ( 53). இளங்கீரனார் என்பது இவர் இயற்பெயர். இவர்…

உங்கள் கருத்தை இடுக...