புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம்- 103. புரத்தல் வல்லன்!

590 0

புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம்

புறம்
103. புரத்தல் வல்லன்!

பாடியவர்: அவ்வையார். அவ்வையாரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 87 – இல் காணலாம்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி. அதியமானைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 87-இல் காணலாம்.

பாடலின் பின்னணி: அதியமானிடம் பரிசில் பெற்றுச் சென்ற அவ்வையார், வழியில் பாலை நிலத்தில், தன் சுற்றத்தோடு இருந்த விறலி ஒருத்தியைக் கண்டார். அவள் தன் வறுமையை அவ்வையாரிடம் கூறி, “ என்னிடம் உள்ள பாத்திரத்தை நிரப்புவர் யார்?” என்று கேட்கிறாள். அதற்கு, அவ்வையார், ”விறலி! அதியமான் அருகில்தான் உள்ளான், அவனிடம் சென்றால் அவன் உனக்கு மிகுந்த அளவில் புலால் உணவு அளிப்பான்; நீ அவனிடம் செல்க” என்று விறலியை ஆற்றுப்படுத்துகிறார்.
திணை: பாடாண். ஓருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகியவற்றைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: விறலியாற்றுப்படை. அரசனின் புகழ்பாடும் பாடினியை அரசனிடம் ஆற்றுப்படுத்துதல்.

ஒருதலைப் பதலை தூங்க, ஒருதலைத்
தூம்புஅகச் சிறுமுழாத் தூங்கத் தூக்கிக்
கவிழ்ந்த மண்டை மலர்க்குநர் யார்எனச்
சுரன்முதல் இருந்த சில்வளை விறலி!
5 செல்வை யாயின், சேணோன் அல்லன்;
முனைசுட எழுந்த மங்குல் மாப்புகை
மலைசூழ் மஞ்சின், மழகளிறு அணியும்
பகைப்புலத் தோனே பல்வேல் அஞ்சி
பொழுதுஇடைப் படாஅப் புலரா மண்டை
10 மெழுகுமெல் அடையிற் கொழுநிணம் பெருப்ப
அலத்தற் காலை யாயினும்
புரத்தல் வல்லன் வாழ்கஅவன் தாளே!

அருஞ்சொற்பொருள்:
1.பதலை = ஒரு வகைப் பறை (ஒரு கண் பறை); தூங்கல் = தணிதல், தாழ்தல், தொங்குதல். 2. தூம்பு = துளை; முழா = முழவு (மேளம் போன்ற ஒரு இசைக் கருவி). 3. மண்டை = இரப்போர் கலம்; மலர்த்தல் = நிமிரச் செய்தல், நிரம்பச் செய்தல். 4. சுரன் = பாலை நிலம்; முதல் = இடம் (ஏழாம் வேற்றுமை உருபு). 5. சேண் = தொலை, சேய்மை (தூரம்). 6. முனை = போர் முனை, போர்க்களம்; மங்குல் = இருள்,மேகம்; மா = கறுப்பு. 7. மஞ்சு = மேகம்; மழ = இளமை; அணிதல் = பூணல், அலங்கரித்தல். 9. புலர்தல் = உலர்தல். 10. மெழுகு = மிருது; நிணம் = கொழுப்பு (கொழுப்பு உள்ள புலால்); பெருப்ப = மிகுதல்; பெருப்பித்தல் = பெரிதாக்குதல். 11. அலத்தல் = வறுமைப் படுதல்; காலை = பொழுது (காலம்). 12. புரத்தல் = ஈதல், காத்தல்.

கொண்டு கூட்டு: விறலி! சேணோன் அல்லன்; பகைப்புலத்தோன் அஞ்சி;அலத்தற் காலையாயினும் மண்டை நிணம் பெருப்பப் புரத்தல் வல்லன் எனக் கூட்டுக.

உரை: காவடியில் ஒரு பக்கம் பதலையும் ஒரு பக்கம் உள்ளே துளை உள்ள சிறிய முழவும் தொங்குமாறு தூக்கிக்கொண்டு, ”என் கவிழ்ந்த பாத்திரத்தை நிரப்புபவர் யார்?” என்று கேட்டுக்கொண்டு பாலை நிலத்திடத்து இருந்த விறலியே! போர்க்களத்திலிருந்து எழுந்த இருள் போன்ற புகை, மலையைச் சூழும் மேகங்களை போல இளைய யானைகளைச் சூழும் பகைவர் நாட்டில் பல வேற்படைகளையுடைய அதியமான் அஞ்சி உள்ளான். நீ அவனிடம் செல்வதாக இருந்தால், அவன் அருகில்தான் உள்ளான். அவன் ஒரு பொழுதும் தவறாமல் மிருதுவான மென்மையான அடைபோன்ற கொழுத்த புலால் உணவால் இரப்போரின் ஈரம் உலராத பாத்திரங்களை நிரப்புவான். வறுமைக் காலத்திலும் அவன் இரப்போர்க்கு அளிப்பதில் வல்லவன். வாழ்க அவன் திருவடிகள்!

சிறப்புக் குறிப்பு: இரப்போர் உண்டவுடன் அவர்களின் பாத்திரம் மீண்டும் மீண்டும் நிரப்பப்படுவதால், “புலரா மண்டை” என்று குறிபிடப்பட்டது.

புறம்
103. புரத்தல் வல்லன்!

புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம்

Buy Book From amazon:

புறநானூறு: புதிய வரிசை வகை by பேராசிரியர் சாலமன் பாப்பையா

புறநானூறு மூலமும் உரையும் by உ.வே.சாமிநாதையர்

Related Post

புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 34. செய்தி கொன்றவர்க்கு உய்தி இல்லை!

Posted by - ஏப்ரல் 11, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 34. செய்தி கொன்றவர்க்கு உய்தி இல்லை! பாடல் ஆசிரியர்: ஆலத்தூர் கிழார் (34. 36, 69, 225, 324). ஆலத்தூர்…
புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம்- 98. பகைவர்களின் வளநாடு கெடுமோ!

Posted by - ஏப்ரல் 13, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 98. பகைவர்களின் வளநாடு கெடுமோ! பாடியவர்: அவ்வையார். அவ்வையாரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 87 – இல் காணலாம்.பாடப்பட்டோன்: அதியமான்…
புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 42. ஈகையும் வாகையும்!

Posted by - ஏப்ரல் 11, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 42. ஈகையும் வாகையும்! பாடல் ஆசிரியர்: இடைக்காடனார் (42). இவர் இடைக்காடு என்னும் ஊரைச் சார்ந்தவராதலால் இடைக்காடனார் என்ற பெயரை…
புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 73. உயிரும் தருகுவன்!

Posted by - ஏப்ரல் 11, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் – 73. உயிரும் தருகுவன்! பாடியவர்: சோழன் நலங்கிள்ளி; ‘நல்லுருத்திரன் பாட்டு’ எனவும் பாடம். சோழன் நலங்கிள்ளிக்கும் அவன் உறவினன் சோழன்…
புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 36. நீயே அறிந்து செய்க!

Posted by - ஏப்ரல் 11, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 36. நீயே அறிந்து செய்க! பாடல் ஆசிரியர்: ஆலத்தூர் கிழார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 34-இல் காண்க.பாடப்பட்டோன்: சோழன்…

உங்கள் கருத்தை இடுக...