சிவில் நிர்வாகத்துக்குள் இராணுவத்தை வலிந்து இழுத்த நீர்ப்பாசன திணைக்களம்!
சிவில் நிர்வாகத்துக்குள் இராணுவத்தை வலிந்து இழுத்த நீர்ப்பாசன திணைக்களமானது சம்பிரதாயபூர்வ வழிபாட்டுக் கடமைகளை உதாசீனப்படுத்தி இராணுவத்தைக் கொண்டு குளத்தின் வான் கதவுகளைத் திறந்து வைத்ததற்கு வலுவான கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
முல்லைத்தீவு மாவட்டத்தின் மிகப்பெரிய குளங்களில் ஒன்றான முத்துஐயன்கட்டு குளத்தின் நான்கு வான் கதவுகளும் தலா 3 அங்குலம் உயரத்துக்கு இன்று திறந்து விடப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் கனமழை காரணமாக முத்துஐயன்கட்டு குளத்தின் நீர்மட்டம் 23′ 9″ஆக உயர்ந்தது.
இந்நிலையில் இன்று குளத்தின் நான்கு வான் கதவுகளும் தலா 3 அங்குலம் உயரத்துக்குத் திறந்து விடப்பட்டுள்ளது.
அதிகளவான இராணுவத்தினரின் பிரசன்னத்தோடு இடம்பெற்ற இந்த உத்தியோகப்பூர்வமான நிகழ்வில் நீர்ப்பாசன திணைக்களத்தின் வடமாகாண பணிப்பாளர் பொறியியலாளர் வீ.பிறேம்குமார், முல்லைத்தீவு மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் பொறியியலாளர் என் .சுதாகரன், முல்லைத்தீவு மாவட்ட இராணுவத்தளபதி மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள், முல்லைத்தீவு மாவட்ட உதவி மாவட்டச் செயலாளர் கேகிதா லிசோ, ஒட்டுசுட்டான் பிரதேச உதவி பிரதேச செயலாளர் இ.ரமேஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இன்று நண்பகல் குளத்தின் வான் கதவுகள் திறப்பதற்காகத் தெரிவிக்கப்பட்ட நிலையில் காலை முதல் முல்லைத்தீவு மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் பொறியியலாளர் என் .சுதாகரன் தமது முத்துஐயன்கட்டு குள கட்டுப்பாட்டு அலுவலகத்துக்குள் இராணுவத்தினரை அனுமதித்துக் குறித்த அலுவலக கட்டடம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளைச் சுத்திகரித்தல் மற்றும் குளக்கட்டு பகுதியில் அலங்கரிக்கும் வேலைகளில் இராணுவம் ஈடுபட்டு இருந்தது.
இதே நேரம் குறித்த பகுதியில் அலங்கரிப்பு பணியை இராணுவத்தினர் மேற்கொண்ட போது குறித்த பகுதியில் இராணுவத்தினர் அலங்காரத்தில் ஈடுபட்ட விடயங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு விமர்சனம் செய்யப்பட்ட நிலையில், உடனடியாக இராணுவத்தினரைக் கொண்டு கட்டப்பட்ட கொடிக்கம்பங்கள் உட்பட அனைத்தும் அகற்றப்பட்டு மிகவும் எளிமையான முறையில் நிகழ்வுகள் இடம்பெற்று இருந்தது.
இந்நிலையில் 12:00 மணிக்கு இராணுவத்தின் உயர் அதிகாரிகள் வருகை தந்ததைத் தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் பொறியியலாளர் என்.சுதாகரன் அவர்களுடைய தலைமையிலே ஆலயத்தில் வழிபாடுகளுக்குச் சென்ற கமக்கார அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் கிராம மக்களுடைய பிரதிநிதிகள் குறித்த இடத்திற்கு வருகை தந்து சம்பிரதாயபூர்வமான வழிபாட்டு நிகழ்வுகளை நடத்துவதற்கு முன்னதாக இராணுவத்தினரைக் கொண்டு வான் கதவுகள் திறந்து விடப்பட்டது.
4 வான் கதவுகளும் திறந்து விடப்பட்ட பின்னர் குறித்த பகுதிக்கு வந்த மக்கள் குறித்த விடயம் தொடர்பில் விசனம் வெளியிட்டிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து தங்களுடைய சம்பிரதாய பூர்வமான நிகழ்வுகளை தாங்கள் செய்ய வேண்டும் என்ற அடிப்படையிலே ஆலயத்திலிருந்து வருகை தந்த பிரதம குரு உள்ளிட்ட அமைப்பின் பிரதிநிதிகள் அனைவரும் சேர்ந்து தங்களுடைய சம்பிரதாய பூர்வமான நிகழ்வுகளைச் செய்திருந்தனர் .
இவ்வாறு அனைத்து நிகழ்வுகளிலும் துப்புரவு பணிகள் உள்ளிட்ட அனைத்து பணிகளிலும் இராணுவத்தினரை ஈடுபடுத்தி ஒரு சிவில் நிர்வாகக் கட்டமைப்புக்கள் இராணுவத்தினரை முற்று முழுதாக ஈடுபடுத்திய செயற்பாடானது பலராலும் விமர்சனம் வெளியிடப்பட்டுள்ளது .
அத்தோடு தங்களுடைய சமய வழிபாடுகளுக்கு இடம் கொடுக்காது இராணுவத்தினரின் அவசர தேவைகளைக் கருதியோ, எதற்காக அவ்வாறு செய்தவர்கள் எனவும் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
நிகழ்வுகளில் சிற்றூண்டி பரிமாறும் வேலை முதல் கொண்டு அனைத்துமே இராணுவத்தால் முன்னெடுக்கப்பட்டது.
நிகழ்வுகளில் கலந்து கொண்ட அதிகாரிகள் சிலரும் இராணுவத்தினரும் சமூக இடைவெளிகளைப் பேணாது, முகக்கவசம் அணியாது, புகைப்படங்கள் எடுத்துக்கொண்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளது.
இவ்வாறு அலுவலக ஊழியர்கள் இருக்கும் போது, கிராம மட்ட பொது அமைப்புக்கள் இருக்கும் போது இராணுவத்தினரை வலிந்து இழுத்து சிவில் நிர்வாகத்துக்கு உட்படுத்திய நீர்ப்பாசனத் திணைக்களத்தின் செயற்பாடுகளுக்கு மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மிகவும் கண்டனம் வெளியிட்டு வருகின்றனர்.
சிவில் நிர்வாகத்துக்குள் இராணுவத்தை வலிந்து இழுத்த நீர்ப்பாசன திணைக்களம்!
Source link