கல்வெட்டு எழுத்துகள் கற்போம்
கோயில்கள். வரலாற்றுக் கருவூலங்களுள் சிறப்பிடம் பெறுபவை. வரலாற்று ஆவணங்களான கலவெட்டுகளைத் தம்மகத்தே பொதித்து வைத்துள்ள களஞ்சியங்கள். நினைத்தவுடனே கல்வெட்டுகளைப் பார்க்க வாயில் திறந்து காத்திருக்கும் எளிமை அகங்கள். கோயில்கள் இல்லையேல் தொல்லியல் துறையே இல்லை எனலாம்.
கோயில்களுக்குச் செல்கிறோம். கோயிற்சுவர்களில் ஏதோ எழுதப்பட்டுள்ளதைக் கண்கள் பார்க்கின்றன. மனமோ அறிவோ அவற்றைப் பொருட்படுத்துவதில்லை. கல்வெட்டுகளில் காணும் எழுத்துகள் தமிழ் எழுத்துகள்தாம் என்றுகூட அறிந்திருப்பதில்லை. பெரும்பாலான நிகழ்வு இது. ஆனால், இதற்கு விலக்கு உண்டு. பலர் இக்கல்வெட்டுகள் பற்றிச் சற்றே எண்ண முற்படுகின்றனர். ஆனால் மேலே முயலுவதில்லை. கல்வெட்டுகளைப் பற்றிய அறிவு குடத்துக்குள் வைத்த சிறு விளக்கொப்ப வெளிச்சம் பரப்பாமலே மறைந்துவிடுகிறது.
இக்கட்டுரை ஆசிரியரின் நிலையும் மேற்சொன்னவாறுதான். சிறுவயது முதல் பார்த்துவரும் கல்வெட்டுகளைப்பற்றிய ஒரு விழிப்பு, பணி ஓய்வுக்குப்பிறகு (அகவை அறுபதுக்கு மேல்) ஏற்படுகிறது. முயற்சி தொடர்கிறது. தமிழகத் தொல்லியல் கழகத்தின் தொடர்பு ஏற்படுகிறது. அங்கு, மூத்த அறிஞர்கள், கல்வெட்டறிவை இளைஞர்களுக்கு எடுத்துச் செல்லுங்கள் எனக்கூறுகின்றனர். அண்மையில், சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பதிவாளர் முனைவர் மு.முத்துவேல் அவர்களைக் காணும் வாய்ப்பு கிட்டியது. அவர் சொன்னதும் கல்வெட்டு அறிவை இளய தலைமுறைக்குச் சேர்ப்பியுங்கள் என்பதே. இந்த நோக்கமே இப்பகுதியைத் தொடங்கியமைக்குக் காரணம்.
கல்வெட்டு எழுத்துகள் ”தமிழி” என்னும் தமிழ் பிராமி, வட்டெழுத்து, தமிழ் எழுத்து என முப்பெரும் பிரிவாக விரியும். தமிழ் பிராமியும், வட்டெழுத்தும் எங்கும் காண இயலா. அவற்றைத் தேடித்தான் போகவேண்டும். ஆனால், ஏழைக்கும் கிடைக்கும் உப்புப் போல எங்கும் கிடைப்பது தமிழ் எழுத்தே. கிடைக்குமிடம் கோயில்கள். கற்க எளிது. கற்றபின் காண எளிது. இளைய தலைமுறையினர் முன்வரவேண்டும்.
முதல் பகுதியில், உயிர் எழுத்துகளும், மெய் (உயிர்மெய் வடிவில்) எழுத்துகளும் கொடுக்கப்பட்டுள்ளன. க,ங,ச,ஞ,ட,ண,த,ந,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன என்னும் வரிசையை மனப்பாடமாக வைத்துப்பழகுதல் நல்லது பயக்கும். ஏனெனில் ங் எழுத்து க எழுத்துடன் இணைந்தே பார்க்கப்படும். இதுபோலவே, ஞ்-ச, ண்-ட, ந்-த, ன்-ற ஆகியன இணைந்து வருவன. இனி, பாடம் தொடர்கிறது.
___________________________________________________________
து.சுந்தரம்
கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கோவை.
[email protected]
அலை பேசி : 9444939156
___________________________________________________________
Tags: தொல்லியல் இடங்கள்