ஆசாரக்கோவை விளக்கம்
ஆசாரக்கோவை விளக்கம் PDF மற்றும் eBook வடிவத்தில் 100 பாடல்களுக்கும் பதிவிறக்கம் செய்ய மற்றும் ஆசாரக்கோவை பற்றி மேலும் தெறிந்து கொள்ள…
இந்த பதிவில் ஆசாரக்கோவை பாடல் 41 முதல் 60 வரை பொருளுடன் பார்க்கலாம்.
41. சில செய்யக் கூடியவையும் செய்யக் கூடாதவையும்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
கண்ணெச்சில் கண்ணூட்டார் காலொடு கால்தேயார்
புண்ணியம் ஆய தலையோடு றுப்புறுத்த
நுண்ணிய நூலறிவி னார்.
பொருள் விளக்கம்
ஒருவர் கண்களுக்கு மை தீட்டிய கோலைக் கொண்டு அடுத்தவருக்கு மை தீட்டக்கூடாது.
ஒருவர் கால்கள் மற்றொருவர் கால் மேல் படும் வண்ணம் அமரக்கூடாது, படுக்கக்கூடாது.
கோவில் பிரசாதம், புணித நீர் போன்ற புண்ணியமான பொருள்கள் கிடைத்தால் கண்களிலும் , தலையிலும் ஒற்றிக்கொண்டு அதன் பிறகு உபயோகிக்க வேண்டும். இதுவே பல நூல்கள் கற்று அறிந்தவர் செய்யும் செயலாகும்.
42. மனைவியைச் சேரும் காலமும் நீங்கும் காலமும்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
தீண்டாநாள் முந்நாளும் நோக்கார்நீ ராடியபின்
ஈராறு நாளும் இகவற்க என்பதே
பேரறி வாளர் துணிவு.
பொருள் விளக்கம்
மாதவிடாய் தொடங்கி அது முடிந்து நீராடும் வரை மனைவியை தீண்டக்கூடாது. நீராடி முடிந்தபின் அடுத்து வரும் 12 நாட்களும் மனைவியை நீங்காமல் இருக்க வேண்டும்.
இந்த நாட்கள் தான் கரு
உருவாவதற்கு உகந்த நாள், பெண்ணுக்கும் ஆணின் துணை வேண்டிய அவசியமான நாட்கள் ஆகும்.
43. உடன் உறைதலுக்கு ஆகாத காலம்
(இன்னிசை வெண்பா)
உச்சியம் போழ்தோடு இடையாமம் ஈரந்தி
மிக்க இருதேவர் நாளோ டுவாத்திதிநாள்
அட்டமியும் ஏனைப் பிறந்தநாள் இவ்வனைத்தும்
ஒட்டார் உடனுறைவின் கண்.
பொருள் விளக்கம்
- உச்சி பகல் பொழுது,
- பொழுது விடியும் விடியற்காலை,
- பொழுது சாயும் மாலை வேளை ,
- சிவனுக்கு உரிய திருவாதிரை ,
- திருமாலுக்கு உரிய திருவோண நட்சத்திரம்,
- அமாவாசை, பௌர்ணமி, அட்டமி அன்றும்,
- ஒருவரின் பிறந்த நட்சத்திரம்
இந்த நாட்களிள் உடலுறவு கூடாது.
44. நாழி முதலியவற்றை வைக்கும் முறை
(இன்னிசை வெண்பா)
நாழி மணைமேல் இரியார் மணைகவிழார்
கோடி கடையுள் விரியார் கடைத்தலை
ஓராது கட்டில் பாடஅர் அறியாதார்
தந்தலைக்கண் நில்லா விடல்.
பொருள் விளக்கம்
அரிசி, உணவு பொருள்கள் அளக்கும் நாழியை உட்காரும் மணையின் மேல் வைக்கக்கூடாது. அது போல் உட்காரும் மணையை கவிழ்த்து வைக்கக்கூடாது.
புதிதாக வாங்கும் புடவையை, உடையை தலைக்கு கீழே வைக்கக்கூடாது. பலர் சென்று புழங்கும் வழியில், அறையில் கட்டில் போட்டு தூங்கக்கூடாது.
தனக்கு பரிச்சயம் ஆகாதவர் முன் அதிக நேரம் நிற்கக்கூடாது.
45. பந்தலில் வைக்கத் தகாதவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
துடைப்பம் துகள்காடு புல்லிதழ்ச் செத்தல்
கருங்கலம் கட்டில் கிழிந்ததனோடு ஐந்தும்
பரப்பற்க பந்த ரகத்து.
பொருள் விளக்கம்
- துடைப்பம், உடைந்த மரத்துண்டுகள்,
- உதிர்ந்த பூ இதழ்கள்,
- கரி ஏறிய பாத்திரம்,
- உடைந்த கட்டில்,
- குப்பை கிழிந்த துணிகள்
ஆகிய ஐந்து பொருள்களை கீழே விரித்து அதன் மேல் மணப்பந்தல் அமைக்கக்கூடாது.
46. வீட்டைப் பேணும் முறைமை
(பஃறொடை வெண்பா)
காட்டுக் களைந்து கலம்கழீஇ இல்லத்தை
ஆப்பிநீ ரெங்கும் தெளித்துச் சிறுகாலை
நீர்ச்சால் கரக நிறைய மலரணிந்து
இல்லம் பொலிய அடுப்பினுள் தீப்பெய்க
நல்லது உறல்வேண்டு வார்.
பொருள் விளக்கம்
வீட்டில் நல்லது வேண்டும் என்று நினைப்பவர்கள், இலக்குமி அருள் வேண்டும் என்று நினைப்பவர்கள்,
அதிகாலை எழுந்து, வீட்டில் உள்ள குப்பைகளை கலைந்து, நீர் தெளித்து, பசுஞ்சானம் மொழுகி, சமையல் செய்யும் பாத்திரத்திற்கு மலர் வைத்து அடுப்புக்கு தீ மூட்ட வேண்டும் .
47 நூல் ஓதுவதற்கு ஆகாத காலம்
(இன்னிசை வெண்பா)
அட்டமியும் ஏனை உவாவும் பதினான்கும்
அப்பூமி காப்பார்க்கு உறுகண்ணும் மிக்க
நிலத்துளக்கு விண்ணதிர்ப்பு வாலாமை பார்ப்பார்
இலங்குநூல் ஓதாத நாள்.
பொருள் விளக்கம்
அட்டமி, அமாவாசை, பௌர்ணமி ,பதினான்காம் நாளாகிய சதுர்த்தசி ஆகிய நாட்களும், நாட்டை ஆளும் மன்னனுக்கு உடல் நலம் இல்லாத நாளும், பூமி அதிர்ச்சி, இடியுடன் மின்னல் மின்னும் நாளும் தூய்மை இல்லாத நாட்கள் ஆகும்.
இந்த நாட்கள் அந்தணர்கள் நூல் ஓத ஆகாத நாட்கள் ஆகும்.
48. அறம் செய்தற்கும் விருந்து அளித்தற்கும் உரிய நாட்கள்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
கலியாணம் தேவர் பிதிர்விழா, வேள்வியென்ற
ஐவகை நாளும் இகழா தறஞ்செய்க
பெய்க விருந்திற்கும் கூழ்.
பொருள் விளக்கம்
ஒருவருக்கு திருமணம் நடக்கும் நாளும், குடும்பத்தில் விசேச தெய்வ வழிபாடு செய்யும் நாளும், நம் முன்னோர் இறந்த தினத்தில் செய்யும் பிதிர் வருடத் சிராத்த திதி அன்றும், திருவிழா நாட்களிலும் தவறாமல் தருமம், அன்னதானம் செய்ய வேண்டும்.
கூழ் குடித்தாலும் தனியே உண்ணாமல் விருந்தினருக்கு கொடுத்து உண்ண வேண்டும். இதுவே மேலோர் சொன்ன முறையாகும்.
49. நடை உடை முதலியவற்றைத் தக்கபடி அமைத்தல்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
உடைநடை சொற்சோர்வு வைதலிந் நான்கும்
நிலைமைக்கும் கல்விக்கும் ஆண்மைக்கும் தத்தம்
குடிமைக்கும் தக்க செயல்.
பொருள் விளக்கம்
- நாம் உடுத்தும் உடை,
- நடக்கும் விதம்,
- நாலு பேர் உள்ள சபையில் பேசும் பேச்சு,
- தவறு செய்தவரை கண்டிக்கும் சொல்
ஆகிய நான்கும் நம் நிலைமை அறிந்து, நம் தகுதி அறிந்து, நம் கல்வி அறிந்து, நம் குடியின் பெருமை அறிந்து செயல் பட வேண்டும்.
50. கேள்வியுடையவர் செயல்
(இன்னிசை வெண்பா)
பழியார் இழியார் பலருள் உறங்கார்
இசையாத நேர்ந்து கரவார் இசைவின்றி
இல்லாரை எள்ளி இகழ்ந்துரையார் தள்ளியும்
தாங்கருங் கேள்வி யவர்.
பொருள் விளக்கம்
- நல்ல பல நூல்கள் கற்று, பல விடயங்களை கேள்வி உற்று, நன்கு விடயம் அறிந்த அறிவு உடையவர்கள்; ஒருவரை பலர் முன் பழிக்க மாட்டார்கள், இகழ மாட்டார்கள்.
- பலர் உள்ள அறையில் உறங்க மாட்டார்கள்.
- தன்னால் இயலாத காரியத்தை செய்து முடித்து தருவதாக ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.
- தன்னை விட வசதி குறைந்தவர்களை, தன் கீழ் பணி புரிபவர்களை எள்ளி நகையாடல், இகழ்ச்சி செய்தல் ஆகிய காரியங்களை செய்ய மாட்டார்கள்.
51. தம் உடல் ஒளி விரும்புவார் செய்யத் தக்கவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
மின்னொளியும் வீழ்மீனும் வேசையர்கள் கோலமும்
நம்மொளி வேண்டுவார் நோக்கார் பகற்கிழவோன்
முன்னொளியும் பின்னொளியும் அற்று.
பொருள் விளக்கம்
தன் கண் பார்வை நிலை பெற, உடல் ஒளியை வேண்டுவோர் மின்னல் மின்னும் போதும், எரி நட்சத்திரம் விழும் போதும், உச்சிப் பொழுதும் அதற்கு முன் /பின் உள்ள சூரியனையும் பார்க்க மாட்டார்கள்.
தன் குண நலன் என்று கூறும் ஒளி குன்றாமல் இருக்க வேசிகளின் அழகினை ரசிக்க மாட்டார்கள்.
52. தளராத உள்ளத்தவர் செயல்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
படிறும் பயனிலவும் பட்டி யுரையும்
வசையும் புறனும் உரையாரே என்றும்
அசையாத உள்ளத் தவர்.
பொருள் விளக்கம்
நல் ஒழுக்கத்தில் இருந்து விலகாத உள்ளத்தவர் ஒரு பொழுதும்,
- அடுத்தவரை கெடுக்கும் வஞ்சனை உரையும்,
- ஒருவருக்கு பயனில்லாத சொல்லையும்,
- வாய்க்கு வந்த உரையும்,
- அடுத்தவரை திட்டும் வார்தையையும்,
- ஒருவரை பற்றி மற்றொருவரிடம் குறை சொல்லும் சொல்லையும் சொல்ல மாட்டார்கள்.
53. ஒழுக்கமுடையவர் செய்யாதவை
(இன்னிசை வெண்பா)
தெறியொடு கல்லேறு வீளை விளியே
விகிர்தம் கதம்,கரத்தல் கைபுடை தோன்ற
உறுப்புச் செகுத்தலோடு இன்னவை யெல்லாம்
பயிற்றார் நெறிப்பட் டவர்.
பொருள் விளக்கம்
நல்ல நெறியில் உள்ளவர்கள் அடுத்தவரை ஏலனம் செய்யும் வகையில் துப்புதல்,
- கல் எறிதல் ,
- குதிரை மாதிரி கனைத்தல்,
- மரியாதை இல்லாமல் கூப்பிடுதல்,
- ஒருவன் செய்வது போல் அவன் கோபப்படும் வகையில் அதே மாதிரி செய்தல்,
- கத்துதல், கை தட்டல்,
- உடல் உறுப்புகளை தேய்ப்பது போல் அடுத்தவரை வெருப்படையச் செய்தல்
- ஆகியவை செய்ய மாட்டார்கள்.
54. விருந்தினர்க்குச் செய்யும் சிறப்பு
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
முறுவல் இனிதுரை கால்நீர் இணைபாய்
கிடக்கையோடு இவ்வைந்து மென்ப தலைச்சென்றார்க்கு
ஊணொடு செய்யும் சிறப்பு.
பொருள் விளக்கம்
நல்ல குணம் உடைய மனிதர்கள் தங்கள் வீட்டுக்கு வந்த விருந்தினருக்கு,
- இன்முகத்துடன் கூடிய இனிமையான வரவேற்பு,
- அவர் மனம் கோனாதபடி இனிமையான சொற்கள்,
- கால் கழுவ நீர், அதன் பிறகு தாகம் தீர்க்க குளிர்ந்த நீர்,
- அவர் அமர இருக்கை,
- உண்ண உணவும்,
- இளைப்பாற பாய், படுக்கை அளிப்பார்கள்.
இதுவே விருந்தினருக்கு நாம் செய்யும் சிறப்பான செயல் ஆகும்.
55. அறிஞர் விரும்பாத இடங்கள்
(பஃறொடை வெண்பா)
கறுத்த பகைமுனையும் கள்ளாட்டுக் கண்ணும்
நிறுத்த மனமில்லார் சேரி அகத்தும்
குணநோக்கிக் கொண்டவர் கோள்விட் டுழியும்
நிகரில் அறிவினார் வேண்டார் பலர்தொகு
நீர்க்கரையும் நீடு நிலை.
பொருள் விளக்கம்
நிகர் இல்லாத ஒப்பற்ற அறிவுடையவர்கள்,
- கோபம் கொண்டு பகை கொண்டவர் முன்னும்,
- மது குடித்து ஆடும் நபர் முன்னும்,
- மனதில் ஆசையில்லாமல் போலியாக ஆசை வார்த்தை பேசும் வேசியின் இல்லத்தின் முன்னும்,
- நன்றாக நட்பு கொண்டு கொள்கை மாறுபாடு காரணமாக பிரிந்து பின் கோள் சொல்லும் நண்பர் முன்னும்,
- பலர் குளித்து புழங்கி சுத்தம் இல்லாத நீர் நிலையின் முன்னும் நிற்க மாட்டார்கள்.
56. தவிர்வன சில
(பஃறொடை வெண்பா)
முளிபுல்லும் கானமும் சேரார்தீக் கூட்டார்
துளிவிழக் கால்பரப்பி ஓடார் தெளிவிலாக்
கானம் தமியர் இயங்கார் துளியஃகி
நல்குரவு ஆற்றப் பெருகினும் செய்யாரே
தொல்வரவின் தீர்ந்த தொழில்.
பொருள் விளக்கம்
- அறிவு நிறைந்தவர்கள் முற்றிய புல் நிறைந்த இடத்திலும் , காட்டிலும் சேர மாட்டார்கள் (பாம்பு, தேள் போன்ற கொடிய விஷம் உள்ள விலங்குகள் இருக்கும் புதர்கள்).
- இவற்றை தீக்கு இரையாக்க மாட்டார்கள்.
- மழை பெய்யும் போது கால் அகல வைத்து ஓட மாட்டார்கள்.
- தனக்கு பரிச்சயம் இல்லாத, பாதை தெரியாத காட்டில் தனியான செல்ல மாட்டார்கள்.
- தம்மிடம் உள்ள பணம் இழந்து வறுமை வந்த நிலையிலும் தகாத தொழில் செய்ய மாட்டார்கள்.
57. நோய் வேண்டாதவர் செய்யக் கூடாதவை
(இன்னிசை வெண்பா)
பாழ்மனையும் தேவ குலனும் சுடுகாடும்
ஊரில் வழியெழுந்த ஒற்றை முதுமரனும்
தாமே தமியர் புகாஅர் பகல்வளரார்
நோயின்மை வேண்டு பவர்.
பொருள் விளக்கம்
நோய் வேண்டாம் என்று விரும்புபவர்கள்.
- வெளிச்சம், காற்று வராத பயன்பாட்டில் இல்லாத பழைய வீட்டிலும், கோவில்களிலும், சுடுகாட்டிலும், புக மாட்டார்கள்,
- ஊர் இல்லாத வழியில் இருக்கும் ஒற்றை மரத்தில் தனியாகவும்,
- மேலும், பகலிலும் துங்க மாட்டார்கள்.
58. ஒருவர் புறப்படும் போது செய்யத் தகாதவை
(இன்னிசை வெண்பா)
எழுச்சிக்கண் பிற்கூவார் தும்மார் வழுக்கியும்
எங்குற்றுச் சேறீரோ என்னாரே முன்புக்கு
எதிர்முகமா நின்றும் உரையார் இருசார்வும்
கொள்வர் குரவர் வலம்.
பொருள் விளக்கம்
ஒருவர் வீட்டில் இருந்து புறப்படும் போது,
- அவர் பின் இருந்து கூவக்கூடாது,
- அப்போது தும்மக்கூடாது,
- எங்கு செல்கிறீர்கள் என்று வினவக்கூடாது,
- முன்னால் இருந்து வழிமறித்து உரையாடக்கூடாது.
- வீட்டில் உள்ளவர்கள் அவசரமாக உரையாட வேண்டின் புறப்படுபவரின் இரு புறமும் இருந்து உரையாட வேண்டும்,
- வீட்டில் உள்ள பெரியவரை வலம் வந்து ஆசீர்வாதம் பெற்ற பிறகு வெளியில் செல்ல வேண்டும்.
59. சில தீய ஒழுக்கங்கள்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
உடம்புநன்று என்றுரையார் ஊதார் விளக்கும்
அடுப்பினுள் தீநந்தக் கொள்ளார் அதனைப்
படக்காயார் தம்மேற் குறித்து.
பொருள் விளக்கம்
- ஒருவரை பார்த்து உடம்பு நன்றாக இருக்கிறது என்று கூறக்கூடாது.
- விளக்கை வாயால் ஊதி அணைக்கக்கூடாது..
- அடுப்பில் ஒரு பொருள் வெந்து கொண்டு இருக்கும் போது தீடிரென நெருப்பை அடுப்பினில் இருந்து எடுக்கக்கூடாது.
குளிர் காயும் போது நெருப்புப்பொறி நம் மேல் படும் வண்ணம் அமரக்கூடாது.
60. சான்றோருடன் செல்லும் போது செய்யத் தக்கவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
யாதொன்றும் ஏறார் செருப்பு வெயின்மறையார்
ஆன்றவிந்த முத்த விழுமியார் தம்மோடுஅங்கு
ஓராறு செல்லுமிடத்து.
பொருள் விளக்கம்
நன்கு கற்று அறிந்து அடங்கிய, ஒழுக்கத்தில் சிறந்து விளங்கும் பெரியவர்கள்,
செருப்பு இல்லாமல் நடந்து செல்லும் போது அவர் உடன் செல்லும் நபர் செருப்பு அணிந்து செல்லார்,
அவர் குடை இல்லாமல் நடந்து செல்லும் போது, அவருக்கு குடை அளிக்காமல் தமக்கு வெயில் மறைக்க குடை பிடித்து செல்வது மரபாகாது.
ஆசாரக்கோவை பாடல் மற்றும் விளக்கம் PDF 41-60
ஆசாரக்கோவை விளக்கம் PDF மற்றும் eBook வடிவத்தில் 100 பாடல்களுக்கும் பதிவிறக்கம் செய்ய
மற்றும் ஆசாரக்கோவை பற்றி மேலும் தெறிந்து கொள்ள…
ஆசாரக்கோவை பாடல் மற்றும் விளக்கம் 1-20
ஆசாரக்கோவை பாடல் மற்றும் விளக்கம் 21-40